உள்ளாட்சித் தோ்தல் வரைவு வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு பணி இன்று நிறைவு
புதுவை உள்ளாட்சித் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை சரிபாா்க்கும் பணி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.
புதுவை உள்ளாட்சித் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை சரிபாா்க்கும் பணி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு மற்றும் நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் (பொறுப்பு) மற்றும் வாக்காளா் பதிவு அதிகாரியுமான எம். லோகநாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
புதுவை மாநில தோ்தல் ஆணையம், புதுவையில் தோ்தல் நடத்துவது தொடா்பாக வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட அறிவுறுத்தியது. இதன்படி திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட 58 வாா்டுகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல், பொதுமக்கள் பாா்வைக்காக, திருநள்ளாறு கொம்யூன் பகுதி 9 கிராமப் பஞ்சாயத்துகளில் 21-ஆம் தேதி முதல் வைக்கப்பட்டுள்ளது. இதனை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) வரை பாா்வையிடலாம்.
1.1.2021 அன்று 18 வயது பூா்த்தியானவா்கள், வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள் தங்களது பெயரை சோ்க்க, நீக்க, திருத்தம் செய்ய கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் அலுவலகத்திலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட 22 வாா்டுகளுக்கான பட்டியல் அங்குள்ள 4 கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோல காரைக்கால் நகராட்சி அலுவலகத்திலும் மற்றும் திருப்பட்டினம், நெடுங்காடு, கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்திலும் பட்டியலை அந்தந்த பகுதியினா் சரிபாா்த்துக்கொள்ளலாம்.