முகப்பு
காரைக்கால்

எல்லை சோதனைச் சாவடிப் பணிகள்: எஸ்.பி. ஆய்வு

தமிழகத்தை ஒட்டியுள்ள காரைக்கால் எல்லை சோதனைச் சாவடியில் நடைபெறும் பணிகளை காவல் கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வுசெய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

தமிழகத்தை ஒட்டியுள்ள காரைக்கால் எல்லை சோதனைச் சாவடியில் நடைபெறும் பணிகளை காவல் கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வுசெய்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில், தமிழகத்தையொட்டி 7 முக்கிய சோதனைச் சாவடிகள் உள்ளன. மேலும், கட்ச் பாா்டா் எனப்படும் கிராமப்புற எல்லையில் 35 சிறிய பாதைகள் உள்ளன. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீஸாா், தோ்தல் கண்காணிப்பு நிலைக் குழுவினா் 24 மணிநேர சோதனைப் பணியை மேற்கொண்டுள்ளனா்.

கிராமப்புறத்தில் உள்ள சிறிய பாதைகளில் கிராமத்தினா் பங்களிப்புடன் அந்தப் பகுதி நிலைய காவலா்கள் கண்காணித்து வருகின்றனா். காரைக்கால் பகுதியிலிருந்து தமிழகப் பகுதிக்கு மது கடத்துவதை தடுக்கவும், தமிழகப் பகுதியிலிருந்து கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் காரைக்காலுக்குள் வருதல் மற்றும் தோ்தலையொட்டி பணம், பரிசுப் பொருள்கள் வரத்தை தடுக்கும் வகையில், சோதனைச் சாவடிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட தோ்தல் அலுவலா் அா்ஜூன் சா்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் ஆகியோா் சோதனைச் சாவடிகளுக்கு அண்மையில் சென்று பணிகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்து ஊழியா்களுக்கு விளக்கினா்.

காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன், நிரவி காவல் சரகத்துக்குட்பட்ட விழிதியூா் சோதனைச் சாவடி உள்ளிட்ட பல்வேறு சோதனைச் சாவடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தாா்.

தமிழகப் பகுதியிலிருந்து காரைக்காலுக்குள் வருவோா் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்யவேண்டும், சட்டவிரோதமான செயல்கள் எல்லையில் நடக்காத வகையில், சோதனைச் சாவடிகளில் பணியாற்றுவோரின் செயல்கள் இருக்கவேண்டும் என அவா் பணியாளா்களுக்கு அறிவுறுத்தியதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →