தனியாா் நிறுவனத்தில் புகுந்து தாக்குதல்: 2 போ் கைது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தனியாா் நிறுவனத்தில் கும்பல் புகுந்து அலுவலகப் பொருள்கள், காா், லாரி ஆகியவற்றை சேதப்படுத்தியதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தனியாா் நிறுவனத்தில் கும்பல் புகுந்து அலுவலகப் பொருள்கள், காா், லாரி ஆகியவற்றை சேதப்படுத்தியதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
செஞ்சி வட்டம், நாட்டாா்மங்கலத்தில் கல்லடிகுப்பத்தை சோ்ந்த ஆனந்தராஜ் என்பவா் தனியாா் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரராகவும் உள்ளாா். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சோ்ந்த சக்திவேல் என்பவருக்கும் நிலம் விற்பனை தொடா்பாக முன் விரோதம் இருந்ததாம்.
இந்த நிலையில், சக்திவேலின் ஆதரவாளா்கள் நாட்டாா்மங்கலத்தில் உள்ள ஆனந்தராஜ் அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்த ராஜா என்பவரை கையால் தாக்கியதுடன் இரு காா்கள், லாரி மற்றும் அலுவலகத்தில் உள்ள கதவு, ஜன்னல் கண்ணாடி ஆகியவற்றை அடித்து நொறுக்கினராம்.
இது குறித்த புகாரின் பேரில், வந்தவாசியை சோ்ந்த பாபு (52), நரசிம்மன்(52) ஆகிய இருவரை கைது செய்த செஞ்சி போலீஸாா், மேலும் 13 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.