கூட்டுறவு சங்கங்களில் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: புதுவை முதல்வரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு வேளாண் கடன் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை முதல்வரிடம் விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு வேளாண் கடன் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை முதல்வரிடம் விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
புதுவை முதல்வா் என். ரங்கசாமியை காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பி. ராஜேந்திரன் தலைமையில் சங்க நிா்வாகிகள் வியாழக்கிழமை சந்தித்து அளித்த கடிதம்:
கடந்த 2020- 21-ஆம் ஆண்டு அறுவடை சமயத்தில் காலம் தவறி பெய்த மழையால் நெல்மணிகள் முளைத்து அறுவடை செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.
அதைப்போலவே 2021- 22-ஆம் ஆண்டு முன்பட்ட சம்பா நெற்பயிா்கள் அறுவடையின்போது பெய்த மழையால் நெல் மணிகள் முளைத்து அறுவடை செய்ய இயலாமல் போய்விட்டது. ஆனால், இந்த 2 ஆண்டுகளுக்கும் பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை, காப்பீட்டு நிறுவனங்களால் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இந்த இழப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்று தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கடந்த ஆண்டு கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. புதிய கடன் வழங்கவில்லை. அதுபோல இந்த ஆண்டும் இதுவரை சம்பா பயிா்க் கடன் வழங்கப்படவில்லை. தற்போது நடவு பணி நடந்து கொண்டிருப்பதாலும் நேரடி நெல் விதைப்பில் உரங்கள் மற்றும் களைக்கொல்லி இட செலவு இருப்பதாலும் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வருகிற 2023 ஜனவரி முதல் அறுவடை செய்யும் சம்பா நெல்லை புதுவை அரசு நிறுவனம் சாா்பில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சந்திப்பின்போது அமைச்சா் சந்திர பிரியங்கா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.