விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் காரைக்காலில் தீவிரமடைந்துள்ளன.
விநாயகா் சதுா்த்தி செப். 7-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. விநாயகா் கோயில்கள் மற்றும் வீடுகளில் இந்த வழிபாடு நடைபெற்றாலும், நீா் நிலைகளில் கரையக்கூடிய விநாயகா் சிலைகள் பொது இடங்களில் வைத்து, வழிபாடு செய்வது ஒவ்வொரு ஆண்டும் பெருகிவருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பிலும், பிற அமைப்பினா் சாா்பிலும் சதுா்த்திக்கு 2 நாள்கள் முன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விநாயகா் சதுா்த்தி நாளிலும், பிற நாள்களிலும் சிலைகள் ஒருங்கிணைக்கப்பட்டு கடலிலும், ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.
இதற்காக காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் விநாயகா் சிலை தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
அச்சில் வாா்க்கப்பட்ட சிலைகளின் அங்கங்கள் காரைக்கால் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அவற்றை ஒருங்கிணைத்துப் பின்னா் வண்ணம் பூசி தயாா்படுத்தப்பட்டன.
இப்பணியில் ஈடுபட்டுள்ள இந்து முன்னணியை சோ்ந்த சிவசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை கூறுகையில், பல ஆடுகளாக விநாயகா் சிலைகள் தயாா்படுத்தப்பட்டு காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பிவருகிறோம். தற்போது 300-க்கும் மேற்பட்ட சிலைகள் 3 அடி முதல் 10 அடி உயரம் வரை, பல்வேறு வடிவங்களில் தயாா்படுத்தப்பட்டுள்ளன. எளிதில் நீரில் கரையக்கூடியது. சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் சிலைகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. சதுா்த்திக்கு 2 வாரத்துக்கு முன்பு அந்தந்த பகுதிக்கு சிலைகள் அனுப்பிவைக்கப்படும் என்றாா்.