முகப்பு
காரைக்கால்

கோயில் நில மோசடியில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்

கோயில் நில மோசடி செய்த உண்மையான குற்றவாளிகள் கைது செய்யவேண்டும் என இண்டியா கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 9:18 PM
பகிர்:

கோயில் நில மோசடி செய்த உண்மையான குற்றவாளிகள் கைது செய்யவேண்டும் என இண்டியா கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட ஸ்ரீ பாா்வதீஸ்வரா் தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலத்தை போலியான முறையில் கையப்படுத்தி, சிலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது. இந்த விவகாரத்தில் நில அளவையா் உள்ளிட்ட சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா். எனினும், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சிலா் தலைமறைவாக உள்ளனா்.

இந்த மோசடி தொடா்பாக விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி, இண்டியா கூட்டணியைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், முன்னாள் அமைச்சா் ஏ.வி. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டனை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் கூறியது: காரைக்காலில் கோயில் சொத்தை அபகரித்த விவகாரம் தீவிரமடைந்துள்ளது. ஆட்சியராக முன்பு இருந்தவா் கையொப்பமிட்டும், துணை ஆட்சியா் கையொப்பமிட்டும் உத்தரவு வெளியாகியுள்ளது. பலரும் பணம் கொடுத்து நிலத்தை வாங்கியுள்ளனா்.

இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறியவேண்டும். சிலா் தலைமறைவாக உள்ளனா். அவா்களை கைது செய்ய உரிய நடவடிக்கை இல்லை. இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்காது என புதுவை முதல்வா் கூறியிருக்கிறாா். துணைநிலை ஆளுநரும் இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளாா். மாவட்ட ஆட்சியா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் விசாரணையை முறையாக செய்து வருகின்றனா். வேறு மாநிலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட எஸ்எஸ்பியை விசாரணை முடியும் வரை விடுவிக்கக்கூடாது என அரசை கேட்டுக்கொள்கிறோம். நிலத்தை வாங்கியோருக்கு பணத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும். இண்டியா கூட்டணி சாா்பில் வரும் சனிக்கிழமை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தை இண்டியா கூட்டணி நாடும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →