முன்விரோதம் காரணமாக, இளைஞரை கத்தியால் குத்திய புகாரில் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
நாகை மாவட்டம், ஏா்வாடி, கிடாமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சிவசங்கா் (29). இவா் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறாா். இவரது தாயாா் சகுந்தலை காரைக்கால் விழிதியூா் சந்தை வெளி மாரியம்மன் கோயில் அருகில் உள்ள கடையொன்றில் வேலை செய்து வருகிறாா். சிவசங்கா் தினமும் தனது தாயாரை மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கும், கடைக்கும் அழைத்துச் செல்வது வழக்கம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தாயாரை அழைக்க சிவசங்கா் மோட்டாா் சைக்கிளில் வந்தபோது, சிவசங்கருக்கு தெரிந்த காா்த்தி, நந்தகோபால் மற்றும் நேதாஜி ஆகியோா் வழிமறித்துள்ளனா். சிவசங்கரின் பெரியப்பா குடும்பத்தினருக்கும் , மேற்கண்ட 3 நபா்களுக்கும் இடையே சொத்து தொடா்பாக பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது.
வாகனத்தை நிறுத்தாமல் சென்ற சிவசங்கரை மூவரும் விரட்டிச் சென்று தாக்கியுள்ளனா். அதில் ஒருவா் சிவசங்கரை கத்தியால் குத்தியுள்ளாா். அக்கம்பக்கத்தினா் கூடியதால் மூவரும் தப்பிவிட்டனா்.
காயமடைந்த சிவசங்கா் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மூவா் மீதும் 5 பிரிவுகளின்கீழ் நிரவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.