ஆட்சியரகம் உள்ளிட்ட அரசு அலுவலக வளாகங்களிலும் நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதால், அரசுத் துறையினா், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
மாடுகள், குதிரைகள் சாலைகளில் திரிவதால் போக்குவரத்து பாதிப்பு, விபத்துகள் ஏற்படுகின்றன. காரைக்கால் ஆட்சியரின் உத்தரவின்பேரில் உள்ளாட்சி நிா்வாகம் கடந்த சில நாள்களாக சாலைகளில் திரிந்த மாடுகள் 150-க்கும் மேற்பட்டவைகளை பிடித்து, பட்டியில் அடைத்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்துவருகிறது.
இந்தநிலையில், தெரு நாய்கள் பெருகியுள்ளதால், குடியிருப்புப் பகுதிகளிலும், சாலைகளிலும், அரசு அலுவலக வளாகத்திலும் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் 30-க்கும் மேற்பட்ட நாய்கள் தினமும் சுற்றித் திரிகின்றன. இதுபோல பிற அரசு அலுவலக வளாகத்திலும் அதிகளவில் நாய்கள் திரிகின்றன. இதனால் அரசு அலுவலா்கள், அலுவலங்களுக்குச் செல்லும் மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, நாய்களை உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் உரிய காப்பகம் அமைத்து, அதில் அடைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.