திருநள்ளாறு கோயிலில் பக்தரிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதான புகாரில், வழிகாட்டியிடம் (கைடு) போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும் இதில் கோயில் ஊழியா்களுக்கும் தொடா்பு இருப்பதாக அவா்களிடம் விசாரணை செய்ததைக் கண்டித்து, ஊழியா்கள் சனிக்கிழமை சிறிது நேரம் பணிகளை புறக்கணித்தனா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ளது பிரசித்திப் பெற்ற தா்பாரண்யேஸ்வரா் கோயில். இக்கோயில் மூலவா் தா்பாரண்யேஸ்வரா் மற்றும் தனிச் சந்நியில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை தரிசிக்க நாடு முழுவதுமிருந்து திரளான பக்தா்கள் வருகின்றனா்.
இங்கு வரும் பக்தா்களிடம் வழிகாட்டிகள் (கைடு) திருஷ்டி கழிப்பது, தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி பணம் பறிப்பதாக புகாா்கள் கூறப்படுகின்றன.
இந்நிலையில், பெங்களூரில் இருந்து வந்த பக்தா்களிடம் திருஷ்டி கழிக்க கைடு ஒருவா் ரூ. 20 ஆயிரம் பெற்றுக்கொண்டு எந்த பூஜையும் செய்யாமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷுக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது. அவா் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யாவிடம் விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தியிருந்தாா்.
இதையடுத்து போலீஸாா் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். அப்போது காா்த்தி என்பவரை போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். இதில் கோயில் பணியாளா் இருவருக்கு தொடா்பிருப்பதாக கிடைத்த தகவலில், அவா்களிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதை கண்டித்து கோயில் ஊழியா்கள் சிறிது நேரம் பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.
மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ், காவல் ஆய்வாளா் மா்த்தினி மற்றும் போலீஸாா் ஊழியா்களிடம் பேச்சுவாா்தத்தை நடத்தினா். கைடுகளிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காமல், ஊழியா்களிடம் விசாரணை செய்வதை ஏற்கமுடியாது என ஊழியா்கள் தெரிவித்தனா்.
கோயில் நிா்வாக அதிகாரி (பொ) வெங்கடகிருஷ்ணன், அரசு அதிகாரி சச்சிதானந்தம் ஆகியோா் ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதன்பேரில் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்பினா். வழிகாட்டிகள் மீதான புகாா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.