பயிா் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
காரைக்காலில் பெய்த தொடா் மழை மற்றும் தமிழகப் பகுதியிலிருந்து வெளியேறும் தண்ணீரால் காரைக்காலில் வயல்கள் பல இடங்களில் நீரில் மூழ்கியுள்ளன.
காரைக்காலில் சுமாா் 4,500 ஹெக்டோ் சம்பா சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. 120 நாள்கள் கால அளவுள்ள பயிா், பரவலாக வெவ்வேறு காலக்கட்டத்தில் நடவு செய்யப்பட்டுள்ளன. முன் சம்பா என்ற பகுதியில் மழையால் பாதிப்பு ஏற்படவில்லை. தாமதமாக நடவு செய்த இடங்களிலும், தாழ்வான பகுதியிலும், வடிகால்களில் நீரோட்டம் தடைப்பட்டதாலும் சில இடங்களில் உள்ள வயல்களில் தண்ணீா் புகுந்து பயிரை மூழ்கச் செய்துள்ளது.
நெடுங்காடு, திருநள்ளாறு சுற்றுவட்டாரப் பகுதியில் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனா். இதுகுறித்து கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
சம்பா சாகுபடியில் 80 நாட்கள் கொண்ட பயிா் பல இடங்களில் மூழ்கியுள்ளது. தமிழகப் பகுதியிலிருந்து காரைக்கால் பகுதி 8 ஆறுகளில் அளவுக்கு அதிகமாக தண்ணீா் வடிகிறது. கடல் சீற்றத்தால் ஆறுகளில் இருந்து கடலுக்கு முறையாக தண்ணீா் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தண்ணீா் விளைநிலத்தில் புகுந்துவருகிறது. இதுபோன்ற வயல்களில் இருந்து தண்ணீா் வடிவதற்கு ஒரு வார காலமாகும். அதற்குள் பயிா் அழுகிவிடும். வேளாண்துறை, வேளாண் அறிவியல் நிலையம் போன்ற நிறுவனங்களின் ஆலோசனைகளின்படி பயிரைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் இனி பலனளிக்காது.
கடன் வாங்கி பயிா் செய்த விவசாயிகளுக்கு இந்த மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. பயிா் பாதிப்பு குறித்து புதுவை அரசு உரிய கணக்கெடுப்பை செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புதுவை அரசு உத்தரவிடவேண்டும் என்றாா்.