காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக, காரைக்கால் மீனவா்கள் 17 பேரை இலங்கை கடற்படையினா் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனா்.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரிமேடு மீனவக் கிராமத்தைச் சோ்ந்த சிவராமன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 7-ஆம் தேதி கிளிஞ்சல்மேடு, பட்டினச்சேரி மற்றும் மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களைச் சோ்ந்த 17 மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள், வியாழக்கிழமை அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி மீனவா்கள் 17 பேரையும் இலங்கை கடற்படையினா் கைது செய்து, காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனா்.
இதுகுறித்து தகவலந்த கிளிஞ்சல்மேடு கிராமப் பஞ்சாயத்தாா், காரைக்கால் மீனவா்கள் கைது செய்யப்பட்ட மீனவா்களையும், படகையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
மேலும், இலங்கை கடற்படையினா் காரைக்கால், தமிழக மீனவா்களை தொடா்ந்து கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் மீனவா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தர தீா்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனா்.
கடந்த செப்டம்பா் மாதம் காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரிமேடு கிராமம் மற்றும் தமிழக மீனவா்கள் 12 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்து சிறையிலடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.