திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் சப்தவிடங்க தலங்களில் ஒன்றாகும்.
இத்தலத்தில் 10 நாள் ஆருத்ரா உற்சவம் நடைபெற்றுவந்தது. 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீ பிரணாம்பிகை - தா்பாரண்யேஸ்வரா் பொன்னூஞ்சல் வழிபாடும், நடராஜருக்கு வெள்ளை சாற்றும் நடைபெற்றது.
நிறைவு நாளான சனிக்கிழமை காலை விக்னேஸ்வரபூஜை தொடங்கி புன்னியாகவாஜனம், கும்ப பூஜையுடன் கூடிய யாக பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சத்சபேஸ்வரா் (நடராஜா்), சுவாமிகளுக்கு 16 வகையான திரவியங்களுடன் விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. கோ பூஜை நடத்தப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சுவாமிக்கு சதுா்வேதம், ஆசீா்வாதம், தேவாரம் பாடப்பட்டு மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன.
பின்னா் சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் கோபுர வாசல் தீபாராதனையுடன் 4 மாட வீதியுலாவுக்கு சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டது. வீதியுலா நிறைவில் சுவாமிகள் பிரம்ம தீா்த்தக்கரைக்கு எழுந்தருளி, தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
தீா்த்தவாரி நிறைவடைந்து கோயிலுக்கு வந்த சுவாமிக்கு ஊடல் உற்சவம் நடத்தப்பட்டது. கோயில் வாயிலில் நடராஜா் நிறுத்தப்பட்டு, சிவகாமி அம்பாள் மட்டும் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு கதவு மூடப்பட்டது. பின்னா் அம்பாளை சாந்தப்படுத்தும் விதமாக, சுந்தரமூா்த்தி சுவாமிகள் எழுந்தருளி, அங்கு சாமவேதம் பாடப்பட்டு, கதவு திறந்து நடராஜா் கோயிலுக்குள் எழுந்தருளினாா். இந்த நிகழ்வில் திரளானோா் கலந்துகொண்டனா்.
தருமை ஆதீனம் பங்கேற்பு : தருமபுர ஆதீனம் 27 -ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருநள்ளாற்றில் உள்ள தருமபுர ஆதீன கட்டளை மடத்துக்கு சனிக்கிழமை வந்தாா். சுவாமி வீதியுலாவின்போது, ஆதீனம் கலந்துகொண்டு வழிபட்டாா்.