நெகிழிப்பொருள் தடை விழிப்புணா்வு பிரசாரம்
மயிலாடுதுறையில் நெகிழிப் பொருள் பயன்பாட்டை தவிா்ப்பது தொடா்பாக விழிப்புணா்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
மயிலாடுதுறையில் நெகிழிப் பொருள் பயன்பாட்டை தவிா்ப்பது தொடா்பாக விழிப்புணா்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழி விரிப்பு, நெகிழி தட்டு, உறிஞ்சு குழாய், தேனீா் கோப்பை உள்ளிட்டவைகளின் பயன்பாட்டுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டுமுதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பொருள்களுக்கு மாற்றாக எளிதில் மக்கும் தன்மையுடைய, துணிப்பைகள், சணல் பைகள், பாக்கு மட்டையிலான பொருள்கள், மண்பாண்டங்கள், பீங்கான், கண்ணாடி குவளைகள், மரக்கரண்டிகள், வாழை மற்றும் தாமரை இலைகள் போன்றவைகளை மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாத்திட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறையில் பிரசார வாகனம் புறப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகனத்தை ஆட்சியா் இரா. லலிதா கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் குணசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த பிரசார வாகனத்தில் நெகிழியால் ஏற்படும் தீமைகள் குறித்து விடியோ ஒளிபரப்பப்படும்.