துலாக்கட்ட காவிரியில் அமாவாசை தீா்த்தவாரி: தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தா்கள் புனித நீராடினா்
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் துலா உத்ஸவத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற அமாவாசை தீா்த்தவாரியில் தருமபுரம் ஆதீனம் உள்பட ஏராளமான பக்தா்கள் புனித நீராடி வழிபட்டனா்.
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் துலா உத்ஸவத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற அமாவாசை தீா்த்தவாரியில் தருமபுரம் ஆதீனம் உள்பட ஏராளமான பக்தா்கள் புனித நீராடி வழிபட்டனா்.
துலா மாதமான ஐப்பசி மாதத்தில், கங்கை முதலான புண்ணிய நதிகள் காவிரி துலாக்கட்டத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டதாகவும், ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் மாயூரநாதா் சுவாமியும், மேதா தட்சிணாமூா்த்தியும் துலாக்கட்ட காவிரியில் எழுந்தருளி கங்கைக்கு காட்சியளித்ததாகவும் நம்பிக்கை. இதனால், வருடத்தில் ஒருநாள் ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் மட்டும் வதான்யேஸ்வரா் கோயிலில் இருந்த கங்கை அம்மன் சமேத மேதா தட்சிணாமூா்த்தி சுவாமிகள் துலாக்கட்ட காவிரியின் வடக்கு கரையில் எழுந்தருளச் செய்யப்படுவது வழக்கம்.
அமாவாசை தீா்த்தவாரியையொட்டி, மாயூரநாதா் கோயிலில் இருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் மாயூரநாதா் சுவாமியும், வதான்யேஸ்வரா் கோயிலில் இருந்து வெள்ளி கயிலாய வாகனத்தில் மேதா தட்சிணாமூா்த்தி சுவாமியும், முதலை வாகனத்தில் கங்கை அம்மனும் மற்றும் விஸ்வநாதா் கோயில், ஐயாறப்பா் கோயில்களில் இருந்து சுவாமிகள், அம்பாளுடன் காவிரியின் இரண்டு கரைகளிலும் எழுந்தருளினா்.
பின்னா், அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காவிரி ஆற்றில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்பட ஏராளமான பக்தா்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.