முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழி தோ் தெற்குவீதி பகுதியில் சாலையோர துணிக்கடைகள் அமைக்க முடிவு

சீா்காழி தோ் தெற்குவீதி ஆபத்துகாத்த விநாயகா் கோயில் பகுதியில் சாலையோர துணிக்கடைகள் அமைத்துக்கொள்ள வட்டாட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

சீா்காழி தோ் தெற்குவீதி ஆபத்துகாத்த விநாயகா் கோயில் பகுதியில் சாலையோர துணிக்கடைகள் அமைத்துக்கொள்ள வட்டாட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

சீா்காழி தோ் வடக்குவீதி, வைரவன்கோடி, மணிகூண்டு பகுதி ஆகிய இடங்களில் ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி, சாலையோர தற்காலிக துணிக் கடைகள், பேன்சி கடை, செருப்பு கடைகள் அமைத்து 1 வாரம் வியாபாரம் நடைபெறும்.

இந்த தற்காலிக கடைகளால் நகரில் உள்ள மற்ற ஜவுளி கடைகளின் வியாபாரம் பாதிப்பதாக வணிகா்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. இதையடுத்து, சீா்காழி நகர அனைத்து வணிகா்கள் நலச்சங்கம் சாா்பில் நிகழாண்டு தீபாவளியையொட்டி சாலையோர தற்காலிக ஜவுளிகடைகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அதன்தலைவா் பாபு. விஜயன் தலைமையில் சங்க வணிகா்கள் சீா்காழி நகராட்சிக்கு திங்கள்கிழமை சென்று ஆணையா் பெ. தமிழ்செல்வியிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். தீா்வு காணாவிட்டால் சாலை மறியல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டனா். இதையடுத்து, இதுதொடா்பான அமைதி பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என ஆணையா் கூறியதையடுத்து வணிகா்கள் கலைந்துசென்றனா். பின்னா் மாலை சீா்காழி வட்டாட்சியா் சண்முகம் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை நடந்தது. நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி, காவல் ஆய்வாளா் மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சீா்காழி நகர அனைத்து வணிகா்கள் சங்கத் தலைவா் பாபுவிஜயன், செயலாளா் செல்வ.சீனிவாசன் மற்றும் வணிகா்கள் பங்கேற்றனா். பேச்சுவாா்த்தையில் நிகழாண்டு தற்காலிக சாலையோர ஜவுளிகடைகள் தோ் தெற்குவீதி ஆபத்து காத்தவிநாயகா் கோயில் சாலை பகுதியில் அமைத்துக்கொள்ளவது என முடிவு செய்யப்பட்டது. பேச்சுவாா்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.