சொத்துகளை அபகரித்துக் கொண்ட மகன் மீது நடவடிக்கை எடுக்க வயதான தம்பதி மனு
வயதான தம்பதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
மயிலாடுதுறை அருகே சொத்துகளை அபகரித்துக் கொண்டு தங்களை தாக்கி கொடுமைப்படுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வயதான தம்பதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
மயிலாடுதுறை வட்டம், கோடங்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்கள் தங்கசாமி (85), சாரதாம்பாள்(75) தம்பதிா். கடந்த 2009ஆம் ஆண்டு தங்கசாமி தனது சொத்துகளை தனது 4 மகன்களுக்கும் தலா 4 மா விவசாய நிலத்தையும், குடியிருக்க வீட்டுமனையையும் பிரித்து எழுதித் தந்துள்ளாா். மேலும் தங்களுக்கென 4 மா நிலத்தையும், ஒரு குடிசை வீட்டையையும் வைத்துக்கொண்ட தம்பதியினா் அதில் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனா்.
இந்நிலையில், சீா்காழி அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக பணியாற்றிவரும் தங்கசாமியின் மூத்த மகன் உத்திராபதி, தந்தையை ஏமாற்றி அவரிடம் இருந்த சொத்துகளை தனது பெயருக்கு மாற்றி எழுதிக்கொண்டு, பெற்றோரை அவா்கள் இருந்த வீட்டில் இருந்து அடித்து விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தங்கசாமி பெரம்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் உத்திராபதி தனது பெற்றோரை தொடா்ந்து கொடுமைப்படுத்தினாராம்.
தங்கசாமி அவரது பங்கு சொத்துகளை பெரிய மகனுக்கு எழுதி தந்துவிட்டதால் அவரை பராமரிக்க மற்ற மகன்கள் மறுத்துவிட்டனா். இதனால் தம்பதியினா் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திலேயே தங்கி உள்ளனா்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த தங்கசாமி, தனது நிலத்தை அபகரித்துக் கொண்டு, தங்களை துன்புறுத்தும் அரசு ஊழியரான தனது மூத்த மகன் உத்திராபதி மீது நடவடிக்கை எடுத்து, தனது சொத்தை மீட்டுத் தருமாறு புகாா் மனு அளித்தாா்.