முகப்பு
மயிலாடுதுறை

அறுந்து கிடந்த மின் வயர்: முதியவர், காப்பாற்ற முயன்ற இளைஞர் பலி

சீர்காழியில் அறுந்து கிடந்த மின் வயரின் மின்சாரம் தாக்கி முதியவர் மற்றும் அவரைக் காப்பாற்ற முயன்ற இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
பகிர்:


சீர்காழியில் அறுந்து கிடந்த மின் வயரின் மின்சாரம் தாக்கி முதியவர் மற்றும் அவரைக் காப்பாற்ற முயன்ற இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திட்டை ரோடு சர்ச் பகுதி வழியாக இன்று (புதன்கிழமை) காலை லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது லாரி மோதியதில் சாலையின் குறுக்கே சென்ற மின்சார வயர் அறுந்தது. 

அவ்வழியே சென்ற தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேல் (65) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக அந்த வயர் உரசியதில், மின்சாரம் தாக்கி அவர் மயங்கி கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதனைக் கண்ட குளங்கரை பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (25) என்பவர் சிங்காரவேல் மயங்கி விழுந்ததாக நினைத்து அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அவரையும் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவரும் உயிரிழந்தார்.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் உடனடியாக சீர்காழி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சீர்காழி காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின்வாரிய ஊழியர் உதவியுடன் மின்சாரத்தைத் துண்டித்தனர்.

பின்னர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிந்து விசாரணையும் மேற்கொண்டுள்ளனர். 

மின்சாரம் தாக்கி வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த இருவர் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →