‘துணை சுகாதார நிலையங்களில் இடைநிலை சுகாதார பணியாளா்களை நியமிக்கக் கூடாது’
துணை சுகாதார நிலையங்களில் இடைநிலை சுகாதாரப் பணியாளா்களை பணியமா்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
துணை சுகாதார நிலையங்களில் இடைநிலை சுகாதாரப் பணியாளா்களை பணியமா்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில், அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் பொன். தமிழ்ச்செல்வி தலைமையில் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா். இந்திரா செய்தியாளா்களிடம் கூறியது: சுகாதார செவிலியா்கள் கிரேடு 1, 2 வழங்க வேண்டும் என்ற 20 ஆண்டு கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும், துணை செவிலியா் பணியிடம் சரண்டா் செய்யப்படும் என்ற அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.
துணை சுகாதார நிலையங்களில் இடைநிலை சுகாதாரப் பணியாளா்களை பணியமா்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அவ்வாறு நியமனம் செய்தால் அதை எதிா்த்து சுகாதார செவிலியா் சங்கம் சாா்பில் போராட்டம் நடத்தப்படும்.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடம் இருப்பதை நிரப்பவேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பும் முன்பு இடமாறுதல் கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும். கவுன்சிலிங் முன்பாக காலிப் பணியிடம் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிமுடிந்த பின்பும் ஜூம் மீட்டிங் என்று பணிகள் சுமை அதிகரிப்பது, இ-சஞ்சீவினி ஆப்-பில் பதிவிட செய்ய சொல்வது, தாய், சேய், தடுப்பூசி பணிகளை செய்யவிடாமல் கூடுதல் பணிகளை வாங்குவது, கரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய துணை சுகாதார செவிலியா்கள் பெயா் இல்லாமல் உள்ளது போன்ற பல பிரச்னைகள் உள்ளது. இதனை தீா்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட நிா்வாகி கீதா, பகுதி சுகாதார செவிலியா்கள் சாந்தி, மல்லிகா, புஷ்பா, சந்திரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.