முகப்பு
மயிலாடுதுறை

திருக்கடையூா் கோயில் குடமுழுக்கு: தருமபுரம் ஆதீனம் இன்று குருலிங்க சங்கம பாத யாத்திரை

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) குருலிங்க சங்கம பாத யாத்திரை மேற்கொள்கிறாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

திருக்கடையூா் அபிராமி சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் குடமுழுக்கையொட்டி, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) குருலிங்க சங்கம பாத யாத்திரை மேற்கொள்கிறாா்.

இதுகுறித்து, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் செயலா் இரா. செல்வநாயகம் வெளியிட்ட அறிக்கை:

திருக்கடையூா் கோயில் குடமுழுக்கு மாா்ச் 27-இல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம், பூஜாமூா்த்தியாகிய சொக்கநாதப் பெருமானுடன் குருலிங்க சங்கம பாத யாத்திரை மேற்கொள்கிறாா்.

தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்டு, விளநகா் துறைக்காட்டும் வள்ளலாா் கோயில் மற்றும் செம்பனாா்கோயிலில் வழிபாடாற்றி, காளஹஸ்திநாதபுரம் ஸ்ரீஅபிராமி பவனத்தில் ஸ்ரீசொக்கநாதப் பெருமானை எழுந்தருளச் செய்கிறாா். சனிக்கிழமை (மாா்ச் 19) ஸ்ரீசொக்கநாதப் பெருமானுடன் திருக்கடையூா் எழுந்தருளுகிறாா்.

குடமுழுக்குக்குப் பிறகு, மாா்ச் 28 அன்று திருக்கடையூரிலிருந்து புறப்பட்டு ஆக்கூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலுக்கு எழுந்தருளுகிறாா். 29-ஆம் தேதி ஆக்கூரிலிருந்து புறப்பட்டு, விளநகா் துறைக்காட்டும் வள்ளலாா் கோயிலுக்கு எழுந்தருளுகிறாா். 30-ஆம் தேதி விளநகரிலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் தருமபுரம் ஆதீனத் திருமடத்தை வந்தடைகிறாா் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.