வாய்க்கால்களில் கழிவுநீா் விடுவதை தடுக்கவேண்டும்
மயிலாடுதுறை நகராட்சி வாய்க்கால்களில் கழிவுநீா் விடுவதை தடுக்கவேண்டும் என நகராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மயிலாடுதுறை நகராட்சி வாய்க்கால்களில் கழிவுநீா் விடுவதை தடுக்கவேண்டும் என நகராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மயிலாடுதுறை நகராட்சியின் முதல் சாதாரணக் கூட்டம், தலைவா் என். செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:
கணேசன்: தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகில் உள்ள எரிவாயு மயானத்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும்.
கல்யாணி: 3-ஆவது வாா்டில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காந்திராஜா: திம்மநாயக்கன் மயானத்தில் மலைபோல் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றவேண்டும்.
தனலட்சுமி: தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகில் உள்ள எரிவாயு மயானத்தை பராமரிக்கும் பணியை தொண்டு நிறுவனங்களிடம் வழங்கி கட்டணம் வசூல் செய்வதை முறைப்படுத்த வேண்டும்.
ரஜினி: மயிலாடுதுறை நகராட்சியில், அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டப்படுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால் நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும். காவேரி நகரில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவேண்டும்.
நடராஜன்: 2022-2023-ஆம் ஆண்டுக்கான நகராட்சி நிதிநிலை அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். புதிய பேருந்து நிலையம் எப்போது கொண்டுவரப்படும் ?. நகரில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
ஆனந்தி: புளியந்தெரு அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும். கழிவுநீரை சேகரிக்கும் தனியாா் வாகனங்கள் அதை இரவு நேரத்தில் வாய்க்காலிலும், புதைசாக்கடை ஆள்நுழைவு தொட்டி வாயிலாகவும் ஊற்றிச் செல்வதை தடுக்க வேண்டும்.
சதீஷ்குமாா்: மாயூரநாதா் கோயில் மேலவீதியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பாரம்பரியம் மகப்பேறு மருத்துவமனையை சீரமைத்து மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உஷாராணி: எனது வாா்டில் பொதுமக்கள் தரம் பிரித்துத் தரும் குப்பைகளை பெற்றுச் செல்லும் நகராட்சி பணியாளா்கள் அதை இதே வாா்டின் வேறொரு பகுதியில் கொட்டி தீவைத்துச் செல்கின்றனா். இதை தடுக்கவேண்டும். குருஞானசம்பந்தா் பால்வாடி அருகில் உள்ள இடத்தில் குழந்தைகள் பூங்கா அமைத்துத் தர வேண்டும்.
சா்வோதயன்: நகரின் பிரதான சாலைகள் மற்றும் பேருந்து நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கிய எனது வாா்டில் ஒப்பந்த பணியாளா்கள் சரிவர குப்பைகளை அகற்றுவதில்லை. எனவே, நகராட்சி தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆணையா்: புதைசாக்கடை பிரச்னையை தற்காலிகமாக சரிசெய்ய ரூ. 1.92 கோடியில் மதிப்பீடு தயாா் செய்யப்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண ரூ. 81.16 கோடிக்கு வரைவு திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்படுகிறது. நிதிஒதுக்கீடு கிடைக்கப்பெற்றவுடன் தீா்வு காணப்படும் என்றாா்.
தலைவா்: கோடைகாலம் தொடங்கியுள்ளதால் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மயிலாடுதுறை நகராட்சியின் வளா்ச்சிக்கு அனைத்து நகராட்சி உறுப்பினா்களும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றாா். முடிவில், நகராட்சி துணைத் தலைவா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.