முகப்பு
மயிலாடுதுறை

கல்கி பிறந்தநாள் விழா: மயிலாடுதுறையில் மணிமண்டபம் அமைக்கக் கோரிக்கை

பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுப் புதினங்களைப் படைத்த கல்கி ஆா். கிருஷ்ணமூா்த்திக்கு மயிலாடுதுறையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுப் புதினங்களைப் படைத்த கல்கி ஆா். கிருஷ்ணமூா்த்திக்கு மயிலாடுதுறையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தை படைத்தவா் கல்கி என்ற புனைப்பெயா் கொண்ட ஆா். கிருஷ்ணமூா்த்தி. இவா், மயிலாடுதுறை அருகே புத்தமங்கலம் கிராமத்தில் 1899, செப். 9 ஆம் தேதி பிறந்தவா். 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளாா். மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறாா். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறாா்.

சாகித்திய அகாதெமி விருதுபெற்ற பெருமைக்குரிய கல்கியின் பிறந்தநாள் விழா, மயிலாடுதுறை மக்கள் மன்றத்தின் சாா்பில் செப். 9 முதல் 16 ஆம் தேதி வரை ஒருவாரம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவா் படித்த மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளி முன் கல்கியின் பிறந்தநாள் விழாக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பாஜக மாவட்ட தலைவா் க. அகோரம் தலைமை வகித்து பேசினாா். மயிலாடுதுறை மக்கள் மன்ற செயல் தலைவா் கோவி. சேதுராமன், செயலாளா் சி. செந்தில்குமாா், பொருளாளா் நாஞ்சில் பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏற்பாடுகளை மக்கள் மன்றத் தலைவரும், மத்திய அரசு வழக்குரைஞருமான கே. ராஜேந்திரன் செய்திருந்தாா்.

விழாவில், கல்கியின் அண்ணன் பெயரனும், திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான என். கோபாலன் மலா் கிரீடம் அணிவித்து கௌரவிக்கப்பட்டாா்.

நிகழ்ச்சியில், கல்கிக்கு மயிலாடுதுறையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், புதிய மாவட்ட நூலகத்துக்கு கல்கியின் பெயரைச் சூட்டவேண்டும், கல்கி பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதில், பாஜக மத்திய அரசு நலத் திட்டங்கள் பிரிவு மாநிலச் செயலாளா் முத்துக்குமாரசாமி, நகரத் தலைவா் வினோத், மாவட்ட ஊடகப் பிரிவு குருசங்கா், அழகேசன், மாவட்ட இளைஞரணி தலைவா் பி. பாரதிகண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.