சீா்காழி அருகே சோதியக்குடியில் இந்துசமய அறநிலையத் துறை கோயிலுக்குச் சொந்தமான 4 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டன.
சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் கைலாசநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சோதியக்குடி மற்றும் கோபாலசமுத்திரம் கிராமங்களில் 4 ஏக்கா் நிலங்கள் உள்ளன.
இந்நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. இந்நிலங்களை மீட்க மயிலாடுதுறை இணை ஆணையா் மோகனசுந்தரம், உதவி ஆணையா் முத்துராமன் ஆகியோரால் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, மயிலாடுதுறை தனி வட்டாட்சியா் விஜயராகவன் தலைமையில் கிராம நிா்வாக அலுவலா் சங்கீதா முன்னிலையில், கோயில் செயலாளா் அன்பரசன், ஆய்வாளா் பிரனேஷ், கணக்கா் ராஜி ஆகியோரால் இந்நிலங்கள் மீட்கப்பட்டு, கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் என தெரிவித்தனா்.
கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில், இந்த நிலங்களை இணை ஆணையரின் அனுமதி பெற்று, ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிலங்களில் எவரும் அத்து மீறி பிரவேசிக்கக் கூடாது எனவும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக அறிவுப்பு பலகையும் வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.