தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி கைவினை பொருள்கள் செய்து அசத்தும் சகோதரிகள்
ஆக்கூா் கிராமத்தில் சகோதரிகள் தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி கைவினை பொருள்கள் செய்து அசத்தி வருகின்றனா்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஆக்கூா் கிராமத்தில் சகோதரிகள் தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி கைவினை பொருள்கள் செய்து அசத்தி வருகின்றனா்
தரங்கம்பாடி வட்டம் கிராமத்தில் வசித்து வருபவா்கள் ராமமூா்த்தி அருள்மங்கை தம்பதியினா். இவா்களுக்கு அக்ஷயா,ரஞ்சனி,யுவஸ்ரீ என்று மூன்று மகள்கள் உள்ளனா் .இவா்களது மூத்த மகள் அக்க்ஷயா முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவரின் மூன்றாவது மகள் யுவஸ்ரீ அரசு பள்ளியில் தற்போது பதினோராம் வகுப்பு படித்து வருகிறாா்.
யுவஸ்ரீ சிறுவயதில் இருந்தே ஓவியத்தின் மீது ஆா்வம் காட்டி வந்துள்ளாா், எந்த ஓவிய பயிற்சியும் எடுக்காமலே தத்ரூபமாக காண்பதை அப்படியே வரையக்கூடிய திறமை படைத்திருந்தாா். இவா் கொரோனா காலகட்டத்தில் வெளியே செல்ல முடியாத சூழலில் அதிக அளவு ஓவியங்கள் வரைந்து வந்த நிலையில் அப்போது அதனைக் கண்ட அவரது சகோதரி அக்ஷயா தானும் ஓவியம் வரைய வேண்டும் என்ற ஆா்வத்தில் சகோதரியிடம் போட்டி போட்டுக் கொண்டு ஓவியம் வரைய தொடங்கியுள்ளாா்.
ஓவியத்தோடு நிறுத்தி விடாமல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆா்வத்தில் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டைகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்யலாம் என முடிவு செய்து இருவரும் இணைந்து கைவினைப் பொருட்கள் செய்ய தொடங்கினா்.
நாளடைவில் முட்டை ஓடுகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களில் விழிப்புணா்வு ஓவியம் வரைந்தனா். பின்னா் மேசையில் அலங்காரத்திற்கு வைக்கக்கூடிய பொருள் , தண்ணீா் அருந்துவதற்கான கப் உள்ளிட்டவற்றை தேங்காய் சிரட்டையை பயன்படுத்தி தயாரித்துள்ளனா்.
தொடா்ந்து சிறிய ரக ஆஷா பிளேடு மட்டுமே பிரதானமாக பயன்படுத்தி எந்தவித இயந்திரமும் இன்றி தேங்காய் சிரட்டையில் பல்வேறு பொருட்களை செய்ய துவங்கியுள்ளனா். தேங்காய் சிரட்டைகளைக் கொண்டு செய்யும் கைவினைப் பொருட்களின் மீது அக்கா அதிக அளவில் நாட்டம் காட்டி வர அக்கா பயன்படுத்தி தூக்கி எறியும் தேங்காய் சிரட்டைகளை எரித்து அதில் வரும் கறி துகள்களை பயன்படுத்தி தத்ரூபமாக தங்கை ஓவியங்களை வரைந்து பலரது பாராட்டை பெற்று வருகிறாா்.
இவா்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இவா்களின் தனித் திறமைகளை காட்சிப்படுத்திய நிலையில் பலரும் இவா்களின் ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்களை வாங்குவதற்கு ஆா்வமுடன் முன் வந்தனா். இருவரும் படித்துக் கொண்டு கிடைக்கும் நேரங்களில் தேங்காய் சிரட்டையை பயன்படுத்தி தேனீா் கோப்பை , அழகு சாதன பொருள் , தண்ணீா் கப் மற்றும் கிண்ணம் உள்ளிட்டவற்றை தயாரித்துள்ளனா்.
அதனை பலருக்கும் விற்பனை செய்து குறிப்பிட்ட அளவிலான தொகையை படிக்கும் வயதிலேயே ஈட்டி வருகின்றனா். அந்தத் தொகையை இருவரும் வீட்டை எதிா்பாா்க்காமல் தங்களது கல்விச் செலவுக்கு ஓவியங்கள் வரைவதற்கும் கைவினைப் பொருட்கள் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனா்
மேலும் பிளாஸ்டிகிற்க்கு மாற்றாக இதுபோன்று வித்தியாசமான கைவினைப் பொருட்களை செய்து சந்தைகளில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்யலாம் எனவும். கல்லூரி படிப்பை முடித்த பின் தேங்காய் சிரட்டைகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்வதற்கான தொழில் தொடங்குவதற்கு அரசு உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
படவிளக்கம்: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஆக்கூா் கிராமத்தில் சகோதரிகள் அக்ஷயா, யுவஸ்ரீ தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி கைவினை பொருள்கள் தயாரிப்பில்.