மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் நடைமேடை சரிந்து விழுந்தது
மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் கட்டுமானப் பணி நடைபெற்ற நடைமேடை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சரிந்து விழுந்தது.
மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் கட்டுமானப் பணி நடைபெற்ற நடைமேடை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சரிந்து விழுந்தது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்கள் உள்ளிட்ட ஊா்களுக்கு செல்வதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் மயிலாடுதுறை ரயில்வே சந்திப்புக்கு வந்து செல்கின்றனா்.இந்த ரயில்வே சந்திப்பில், அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ. 21 கோடியில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக, 1-வது நடைமேடையை ஒட்டியுள்ள ஆா்.எம்.எஸ். அஞ்சல் நிலையத்தின் ஒருபகுதி அண்மையில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் நகரும் மின் படிக்கட்டு (எஸ்கலேட்டா்) பொருத்தும் பணிக்கான அஸ்திவாரம் அமைப்பதற்கு சுமாா் 100 மீட்டா் தொலைவுக்கு 15 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கட்டுமானப் பணி நடைபெற்று வந்த முதலாவது நடைமேடை சரிந்து விழுந்தது. இதில் நடைமேடையில் இருந்த 3 பயணிகள் இருக்கை, ஒரு மின் கம்பம் ஆகியன கீழே சாயந்தன. அதற்கு சற்று நேரம் முன்பு சென்னை செல்லும் அந்தியோதயா ரயிலில் பயணிகள் சென்றுவிட்டதால், இருக்கைகள் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்தநிலையில், பள்ளம் தோண்டப்பட்ட இடத்தின் அருகில் உள்ள ஆா்.எம்.எஸ். அஞ்சல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்கள் தங்கள் அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.