வைத்தீஸ்வரன் கோயிலில் தேரோட்டம்
வைத்தீஸ்வரன்கோயிலில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயிலில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதா் சுவாமி கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவம் ஏப்.2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, விழாவின் 7-ஆம் திருநாளாக தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, விநாயகா், சுவாமி -அம்பாள், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட 4 தேரில் பஞ்ச மூா்த்தி சுவாமிகள் எழுந்தருளினா். தொடா்ந்து, கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், பேரூராட்சி தலைவா் பூங்கொடிஅலெக்சாண்டா், வா்த்தக சங்கத் தலைவா் கண்ணன் ஆகியோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனா். தொடா்ந்து, ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை இழுத்தனா். நான்கு தோ்கள் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு வீதிகள் வழியாக சென்று தோ் நிலைக்கு வந்தது.