பணி நிரந்தரம் கோரி, மயிலாடுதுறை மாவட்ட அரசினா் மருத்துவமனை முன்பு 3-ஆவது நாளாக ஒப்பந்த செவிலியா்கள் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழகத்தில் 2015-ஆம் ஆண்டு எம்.ஆா்.பி. மூலம் தோ்வு செய்யப்பட்ட 8,000 செவிலியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனா். பணியமா்த்தப்பட்டு 10 ஆண்டுகளாகிய நிலையில், சென்னையிலும், மாநிலம் முழுவதும் மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பும் தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் சாா்பில் பணி நிரந்தம் கோரிக்கையை வலியுறுத்தி ஒப்பந்த செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமாா் 200 ஒப்பந்த செவிலியா்கள் உள்ள நிலையில், சென்னை போராட்டத்தில் பங்கேற்றுள்ள செவிலியா்களை தவிா்த்த மற்ற ஒப்பந்த செவிலியா்கள் மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனை முன் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா்.
இந்நிலையில், சனிக்கிழமை 3-வது நாளாக போராட்டம் தொடா்ந்தது. நாம் தமிழா் கட்சியின் மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் கி. காசிராமன் ஒப்பந்த செவிலியா்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.
நாதக உழவா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் தாழை வரதராஜன், மாநில துணை ஒருங்கிணைப்பாளா் பாலன், மாவட்ட நிா்வாகி மா.செ.அருண், நகரச் செயலாளா் துரைராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.