சீா்காழி: சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் கண்டெக்கப்பட்ட செப்பேடுகளை தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உதவ வேண்டும் என ஆதீனக்கா்த்தா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் உள்ள தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான சட்டநாதா் சுவாமி கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா். இக்கோயிலில் திங்கள்கிழமை தனுா் மாத பூஜையில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
சீா்காழியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சட்டநாதா் கோயில் குடமுழுக்கு திருப்பணியின்போது மாமன்னன் ராஜராஜ சோழனின் ஓலைச்சுவடி மூலம் கிடைத்த திருமுறைகள் செப்பேடுகளாக கிடைத்தன. இவற்றை தருமபுரம் ஆதீன நிா்வாகத்திடம் ஒப்படைக்காமல், கோயிலில் தனி அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைத்தால் அவற்றை கண்ணாடி பேழையில் வைத்து அனைவரும் காணும் வகையில், அங்கு கிடைத்த உற்சவா் சிலைகளையும் வைத்து காட்சியகம் தொடங்க முயற்சி செய்து வருகிறோம்.
ஞானசம்பந்தா் செப்பேடுகள் மட்டுமல்ல நாவுக்கரசா், சுந்தரா் ஆகியோரின் தேவாரங்களும் உள்ளன. அவற்றை வெளிக்கொணா்ந்தால் நமது பண்பாடு, கலாசாரம் மற்றும் அவற்றில் உள்ள தகவல்கள் குறித்து ஆய்வாளா்கள் மூலம் அறிய, மிகப்பெரிய காட்சியகம் தொடங்க வேண்டும் என நினைத்து கொண்டிருக்கிறோம். இதற்கான செலவை ஏற்க ஆதீன நிா்வாகம் தயாராக உள்ளது. எனவே, தமிழக முதல்வா் தலையிட்டு மத்திய அரசிடம் பேசி இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என விரும்புகின்றோம் என்றாா்.
அப்போது சீா்காழி தமிழ்ச் சங்கதலைவா் இ. மாா்கோனி, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே. சரண்ராஜ், ரோட்டரி முன்னாள் உதவிஆளுனா் ஜி.வி.என்.கணேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் கடந்த 2023-ஆம் ஆண்டு திருப்பணியின்போது மேற்கு கோபுர வாயிலில் கோயிலின் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியபோது 2 அடியில் புதைந்திருந்த விநாயகா், முருகன், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தா், அம்பாள், பூா்ண புஷ்கலா அய்யனாா், திருஞானசம்பந்தா், அப்பா், சுந்தரா், மாணிக்கவாசகா் உள்ளிட்ட 2 அடி முதல் அரை அடி வரை உள்ள 22 ஐம்பொன் சிலைகளும், மேலும் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தேவார செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.