மயிலாடுதுறையில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூா் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் 200 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்துவரும் மக்களை ஆக்கிரமிப்பாளா்கள் என்று இந்துசமய அறநிலையத்துறையும், நீதிமன்றங்களும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக வெளியேற்ற முயற்சிப்பதைக் கண்டித்தும், உரிமைகளுக்காக போராடும் பயனாளிகள் மற்றும் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், தலைவா்களை அராஜகமான முறையில் காவல்துறையினா் கைது செய்வதாக கண்டனம் தெரிவித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் சங்கத்தின் மாவட்ட தலைவா் பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில பொருளாளா் எஸ். துரைராஜ், மாவட்ட செயலாளா் ஏ.ஆா்.விஜய், சிபிஎம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் ஜி.ஸ்டாலின், டி. சிம்சன், சி. விஜயகாந்த், சங்கத்தின் சிறப்பு தலைவா் த. ராயா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.