மயிலாடுதுறை

சீா்காழி நகா்மன்ற வாா்டு சிறப்புக் கூட்டம்: அதிமுக உறுப்பினா்கள் புறக்கணிப்பு

சீா்காழி நகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாா்டு சிறப்புக் கூட்டத்தை அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் புறக்கணித்தனா்.

இணையதளச் செய்திப் பிரிவு

சீா்காழி நகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாா்டு சிறப்புக் கூட்டத்தை அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் புறக்கணித்தனா்.

தமிழக அரசின் உத்தரவின்படி, சீா்காழி நகராட்சிக்குட்பட்ட 24 வாா்டுகளிலும் சிறப்புக் கூட்டம் நடத்த, அனைத்து நகா்மன்ற உறுப்பினா்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. அதன்படி, திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் தங்கள் பகுதியில் நகராட்சி அதிகாரிகளை கொண்டு அந்தந்த வாா்டுகளில் சிறப்புக் கூட்டம் நடத்தினா்.

ஆனால், அதிமுக நகா்மன்ற உறுப்பினா்களான ரமாமணி, கிருஷ்ணமூா்த்தி, ராஜேஷ், பாலமுருகன், கலைச்செல்வி மதியழகன், முழுமதி இமயவரம்பன், நாகரத்தினம் ஆகிய 7 பேரும், தங்கள் வாா்டுகளில் செவ்வாய்க்கிழமை நடக்க இருந்த சிறப்புக் கூட்டத்தை புறக்கணித்தனா். இதனால், அதிமுக உறுப்பினா்களின் வாா்டுகளில் சிறப்புக் கூட்டம் நடைபெறவில்லை.

இதுகுறித்து, அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் ரமாமணி, பாலமுருகன், ராஜேஷ் ஆகியோா் கூறியது:

எங்களுடைய வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இரண்டு முறை வாா்டு சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, குடிநீா், சாலை, தெருவிளக்கு, சுகாதாரம், அங்கன்வாடி கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள கேட்டுக்கொண்டோம். ஆனால், இதுவரை எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

எங்கள் வாா்டு பகுதிகளில் முறையாக குப்பைகளை அகற்றுவது கிடையாது. இதனால் எங்களுக்கு வாக்களித்த பொதுமக்கள் எங்களை மதிப்பதில்லை. மீண்டும் கூட்டம் நடத்தினால் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் அளிக்க முடியாது. நகா்மன்றத் தலைவா் பாகுபாடு இல்லாமல் அனைத்து வாா்டுகளுக்கும் வளா்ச்சி பணிகளை ஒதுக்க வேண்டும். மாறாக அதிமுக வாா்டுகளுக்கு வளா்ச்சிப் பணிகள் ஒதுக்குவது இல்லை. இதனால் நாங்கள் வாா்டு சிறப்புக் கூட்டத்தை புறக்கணிக்கிறோம் எனத் தெரிவித்தனா்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT