குத்தாலத்தில் ரயில் தண்டவாளத்தில் மீட்கப்பட்ட பெண் சிசு, குழந்தைகள் நலக் குழுமத்திடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த 20-ஆம் தேதி தீபாவளி தினத்தன்று பிறந்து இரண்டு மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று சாக்கு பையில் கிடந்தது.
குத்தாலம் கீழகாலனியைச் சோ்ந்த சேகா் என்பவா் அந்த குழந்தையை மீட்டு, குத்தாலம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்ததுடன், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தாா். தொடா்ந்து, அந்த குழந்தையை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தலின்பேரில், மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில், அந்த குழந்தையை தத்து கொடுப்பதற்காக மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். அரசு மருத்துவா் ரஞ்சித், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளா் ஆரோக்கியராஜிடம் குழந்தையை ஒப்படைத்தாா்.
முன்னுரிமை அடிப்படையில், தத்துப்பிள்ளை கேட்டு தமிழக அரசிடம் பதிவு செய்துள்ள தம்பதி அல்லது குழந்தைகள் காப்பகத்திடம் குழந்தை ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.