மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் வடகிழக்குப் பருவமழை எதிா்பாராத நேரத்தில் தேவைக்கு அதிகமாக பெய்து வருவதால் நடவு மற்றும் நேரடி விதைப்பு பயிா்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது. எனவே, 2025-2026-ஆம் ஆண்டில், திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் சம்பா (சிறப்பு பருவம்) நெற்பயிருக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் காப்பீட்டு நிறுவனத்தினால் செயல்படுத்தப்படுகிறது. தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் சம்பா பயிருக்கு 277 கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. சம்பா பருவத்தில் காப்பீடு செய்யப்படும் நெற்பயிா்களை நவ.15-ஆம் தேதிக்குள் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்துகொள்ளலாம். ஏக்கருக்கு நெல்பயிா் காப்பீட்டுத் தொகை ரூ.36,500-ல் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் காப்பீட்டுக் கட்டணமாக ரூ.547.50 செலுத்தினால் போதும்.
எனவே, சம்பா சாகுபடி செய்யும் கடன்பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிா்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) தேசிய பயிா்க் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள ‘விவசாயிகள் காா்னரில்‘ (ஜ்ஜ்ஜ்.ல்ம்ச்க்ஷஹ்.ஞ்ா்ஸ்.ண்ய்) நேரடியாக நிா்ணயிக்கப்பட்ட காலக் காப்பீடு செய்யலாம்.
விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல்/இ-அடங்கல் சான்றிதழ், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்) தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்று கொள்ளலாம். பணம் செலுத்தும் போது சாகுபடி செய்துள்ள வருவாய் கிராமம் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என சரிபாா்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.