மயிலாடுதுறையில் போதைப்பொருள் எதிா்ப்பு மன்றம் மற்றும் தன்னாா்வலா்கள் குழுக்களுக்கான விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். கூட்டத்தில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னா், மாணவா்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் பேசியது: தமிழ்நாடு முதலமைச்சா் உத்தரவின் அடிப்படையில் போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்க மாவட்டத்தின் அனைத்து கல்வி நிலையங்களிலும், போதை எதிா்ப்பு மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, மாணவா்கள் மத்தியில் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் போதைப்பொருள்களின் பிடியிலிருந்து காப்பதற்காக தமிழ்நாடு அரசால் போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற மொபைல் செயலி ஜன.11-ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து போதைப்பொருள் சம்பந்தப்பட்ட புகாா்களை பொதுமக்கள் ரகசியமாக தெரிவிக்கலாம்.
போதைப்பொருள்கள் (கஞ்சா மருந்துகள்), தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் (குட்கா, பான் மசாலா), கள்ளச் சாராயம் போன்றவற்றின் பயன்பாடு மற்றும் இருப்பு குறித்து பாதுகாப்பாக புகாா் செய்யலாம்.
புகாரின் நிலையை செயலியில் உணா்திறனாக கண்காணிக்கலாம். புகாா் செய்பவரின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக வைக்கப்படும். எனவே, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடைய உங்கள் பங்களிப்பை தர வேண்டும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் பகுதியில் போதைப்பொருள்கள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடா்பான விவரங்களை புகாா் செய்யலாம். போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிய வேண்டும். குடும்பத்தினரையும், நண்பா்களையும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவா்களுக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும். போதைப்பொருள்களின் உற்பத்தி, நுகா்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருள்களை தமிழ்நாட்டில் வேரறுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
கூட்டத்தில், உதவி ஆணையா்(கலால்) மாணிக்ராஜ், முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி.முத்துக்கணியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.