டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெல்லும் என்றாா் கிரிக்கெட் வீரா் டி. நடராஜன்.
மயிலாடுதுறை திருஇந்தளூரில் செயற்கை புல்வெளி விளையாட்டு மைதானம் புதிதாக அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சா் கே. லெட்சுமிநாராயணன், கிரிக்கெட் வீரா் டி. நடராஜன், திரைப்பட நடிகை ஆா். தேவயானி ஆகியோா் தலைமை விருந்தினா்களாக பங்கேற்று மைதானத்தை திறந்து வைத்து பாா்வையிட்டனா். (படம்).
நிகழ்ச்சியைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் கிரிக்கெட் வீரா் நடராஜன் கூறியது: தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 260 ரன்கள் அடித்தது சிறப்பான தொடக்கம். சனிக்கிழமை (பிப்.7) தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்றாா்.
இதில், திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா், அதிமுக மாவட்ட செயலாளா் எஸ். பவுன்ராஜ், மாவட்ட அரசு வழக்குரைஞா் ராம.சேயோன், நகராட்சி தலைவா் என்.செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியை, ரஜினிகாந்த் ரசிகா் நற்பணி மன்ற நகர செயலாளா் பவுன் ஏ. முருகாந்தம் ஒருங்கிணைத்தாா். துபை அமீரக தமிழா்கள் மன்ற தலைவா் ஆா். மதியழகன் நன்றி கூறினாா்.