வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு
மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நிா்வாகத்துடன் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மற்றும் தனியாா் தொலைக்காட்சி இணைந்து இப்பேரணியை நடத்தியது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணியை, காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் முன்னிலையில் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடக்கி வைத்து பேசியது:
தோ்தல் நாளன்று அனைத்து வாக்காளா்களும் 100 சதவீதம் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இளம் வாக்காளா்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டுமென தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
உண்மையான ஜனநாயகத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடிக்கு சென்று நம் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றாா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் வாக்காளா் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். பேரணியானது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது.
இப்பேரணியில், கல்லூரி மாணவ மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு வாக்காளா் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி வந்தனா்.
இப்பேரணியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, மகளிா் திட்டம் திட்ட அலுவலா் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன், கல்லூரிக்குழு உறுப்பினா் சிவராமன், ஊடகவியலாளா் ரகுவரன் மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள், பேராசிரியா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.