வடிகால் ஆறுகளை தூர்வாராததே வெள்ள பாதிப்புகளுக்குக் காரணம்: மு.க. ஸ்டாலின் பேட்டி
தமிழக அரசு வடிகால் ஆறுகளை தூர்வார முக்கியத்துவம் அளிக்காததுதான் வெள்ள பாதிப்புகளுக்குக் காரணம் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தமிழக அரசு வடிகால் ஆறுகளை தூர்வார முக்கியத்துவம் அளிக்காததுதான் வெள்ள பாதிப்புகளுக்குக் காரணம் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம், தலைஞாயிறு பழையாற்றங்கரை பகுதி மக்களை புதன்கிழமை இரவு சந்தித்து உதவி பொருள்களை வழங்கிய ஸ்டாலின், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :
மழை, வெள்ளம் ஏற்படும் காலங்களில் பழையாற்றங்கரை பகுதி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. 2010-ஆம் ஆண்டில் இதேபோல வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பழையாற்றங்கரை கிராமம் பாதிக்கப்பட்டபோது, அப்போதைய திமுக அரசு உடனடியாக அமைச்சர்களை இப்பகுதிக்கு அனுப்பி ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
ஆய்வைத் தொடர்ந்து, வண்டல் - அவுரிக்காடு இடையே ரூ. 14 கோடி மதிப்பில் பாலம் அமைக்க உத்தரவிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், பாலம் அமைக்கும் பணி முடக்கப்பட்டது. தற்போது, இந்த பாலம் அமைக்கும் பணி அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்ற உண்மைக்கு மாறான தகவலை நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்து வருகிறார்.
வடிகால் ஆறுகள் தூர்வாரப்படாததுதான், வெள்ள பாதிப்புகளுக்கு முக்கிய காரணம். குடிமராமத்து என்ற பெயரில் பணம் செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளதே தவிர, இத்திட்டத்தின் கீழ் எவ்வித பணியும் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் உண்மை என்றார் ஸ்டாலின்.
உதவி பொருள்கள் வழங்கல்...
வெள்ளப் பெருக்குக் காரணமாக பழையாற்றங்கரையில் சுமார் 150 வீடுகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் இப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை இருப்பதால், ஸ்டாலின் வருகையையொட்டி, அப்பகுதி மக்கள் படகு மற்றும் டிராக்டர் மூலம் தலைஞாயிறு - வேட்டைக்காரனிருப்பு பிரதான சாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
புதன்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் ஸ்டாலின் இப்பகுதிக்கு வந்த போது, லேசான மழை குறுக்கிட்டது. அதனால், மக்கள் அனைவரையும் சந்திக்க இயலாத நிலையில், ஒரு சிலரை சந்தித்து ஆறுதல் கூறி, திமுக சார்பில் வேட்டி, சேலை, அரிசி உள்பட 6 வகையான உதவி பொருள்களைக் கொண்ட பைகளை அவர் வழங்கினார். இதைத் தொடர்ந்து, திமுக நிர்வாகிகள் மற்றவர்களுக்கு உதவிப் பொருள் பைகளை வழங்கினர்.
மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு, நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் என். கெளதமன், கீழ்வேளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உ. மதிவாணன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மா. மீனாட்சிசுந்தரம், என்.வி. காமராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.