காவிரி விவகாரம்: நாகை, திருவாரூரில் முற்றுகையில் ஈடுபட்ட 66 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாகப்பட்டினம், திருவாரூரில் மாவட்ட
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாகப்பட்டினம், திருவாரூரில் மாவட்டஆட்சியரகம் முன்பாக திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றத்தினர் 66 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். இயற்கை வளத்தை சீரழிக்கும் மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோதிட்டங்களை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கே. பாஸ்கர் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுஉறுப்பினர் எம். செல்வராசு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி வழக்குரைஞர் பாண்டியன், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்திமுழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொண்ட 29 பேரை நாகூர் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட போராட்டக் குழுவினர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலத் தலைவர் பெ. முருகேசு தலைமையிலும் மாநிலநிர்வாகக்குழு உறுப்பினர் கே. ராஜா, மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன் ஆகியோர் முன்னிலையிலும், மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், போலீஸாரின் தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் போராட்டக் குழுவினருக்கும், போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், நாகை மற்றும் திருவாரூரில் கைது செய்யப்பட்ட 66 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.