நாகப்பட்டினம்

பொதுமக்களுக்கு கலங்கலான குடிநீர் விநியோகம்

DIN

சீர்காழி நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் கடந்த சில வாரங்களாக  கலங்கலாக சேறுகலந்த நிலையில் வருவதால் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்தமுடியாமல் தவிக்கின்றனர்.
சீர்காழி நகராட்சிக்குள்பட்ட 24 வார்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து குழாய் மூலம் எடுத்து வந்து சுத்தம் செய்து விநியோகிக்கப்படுகிறது. 
இந்நிலையில், நகரின் சில பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பு நீராகவும், காவி நிறமாகவும் மாறிவிட்டதால் பெரும்பாலான மக்கள் சீர்காழி நகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.
சீர்காழி நகராட்சி மூலம் சுமார் 840 குடிநீர் இணைப்பு வீடுகளுக்கு வழங்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும், நகரின் பல இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பொது குடிநீர் குழாய்கள் அமைத்தும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இவ்வாறு நகராட்சி குடிநீரை பொதுமக்கள் அதிகளவு  பயன்படுத்திவரும் நிலையில் கடந்த சில வாரங்களாக நகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் மிகவும் கலங்கலாக, சேறு கலந்த நிறத்தில் வருகிறது.  இந்த குடிநீரை பிடித்து வைத்து சுமார் 1 மணிநேரத்துக்குப் பிறகு பயன்படுத்தினாலும் தண்ணீரின் நிறம் மாறவில்லை. மேலும்  தண்ணீரில் சேற்றுவாடை வருகிறது. இதனால், கடந்த சில வாரங்களாக நகராட்சி குடிநீரை பொதுமக்கள் குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். 
இதுகுறித்து சீர்காழி நகராட்சி பொறியாளர் மெய்பொருள் கூறியது: கொள்ளிடம் ஆற்றில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் நகராட்சிக்கு குடிநீர் எடுத்துவரும் கிணறுகள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் தண்ணீர் பம்பிங் செய்யும்போது குடிநீருக்கு அடியில் உள்ள மண்ணுடன் கலந்து கலங்கலாக வருகிறது. 
இந்த தண்ணீரை நன்கு சுத்தகரித்துதான்  பொதுமக்களுக்கு விநியோகம் செய்கிறோம். ஆற்றில் நிரேற்றும் நிலைய கிணறுகளை மூழ்கடித்துள்ள தண்ணீர் மட்டம் சற்று குறைந்தததும் இவ்வாறு கலங்கலாக தண்ணீர் வருவது நின்றுவிடும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் தீா்த்த உற்ஸவம்

உலக தடுப்பூசி விழிப்புணா்வு வார நிகழ்ச்சி

இளைஞா் தற்கொலை: சடலத்தை உடனடியாக உடற்கூறாய்வு செய்யக்கோரி உறவினா்கள் மறியல்

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகாா் தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT