"குப்பைகளைத் தெருவில் கொட்டினால் அபராதம்'
மயிலாடுதுறையில் குப்பைகளைத் தெருவில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் பி. கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறையில் குப்பைகளைத் தெருவில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் பி. கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மூலம் நகராட்சி பகுதிகளில் உருவாகும் திடக்கழிவுகளை முறையாகக் கையாளுதல் குறித்த திடக்கழிவு மேலாண்மை திட்ட விதி 2016-இன்படி பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மயிலாடுதுறை நகராட்சி, ஆனந்ததாண்டவபுரம் சாலையில் உள்ள உரக்கிடங்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குவிக்கப்பட்டுள்ள திடக்கழிவுகள் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என இயந்திரங்களைக் கொண்டு தரம் பிரிக்கப்படுகின்றன.
மேலும், நகராட்சியின் 3 இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம்பிரித்து, மக்கும் உரமாக்கி, சுற்றுபுறத்துக்கும், நிலத்தடி நீருக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி நுண்ணுயிரி கிடங்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறாக நகராட்சியில் தினமும் உருவாகும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களால் உருவாக்கப்படும் மக்காத குப்பைகளை புதன்கிழமைதோறும், மக்கும் குப்பைகளை மற்ற நாள்களிலும் பிரித்து கொடுக்க வேண்டும். இதனை மீறி குப்பைகளை தெருவில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.