கீழையூரில் 100 பயனாளிகளுக்கு ஆடு வழங்கல்
கீழையூரில் 100 பயனாளிகளுக்கு வேர்ல்டு விஷன் இந்தியா சார்பில் ஆடு வழங்கப்பட்டது.
கீழையூரில் 100 பயனாளிகளுக்கு வேர்ல்டு விஷன் இந்தியா சார்பில் ஆடு வழங்கப்பட்டது.
கீழையூரில் உள்ள சமுதாய கூடத்தில் வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் ஆடு வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை(டிச.7) நடைபெற்றது. வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் கீழையூர் ஒன்றியத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச ஆடு வழங்குவதற்காக திட்டமிடப்பட்டது.
அதன்படி கீழையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தஜோதிபால்ராஜ் தலைமையில் முதல் கட்டமாக கீழையூர், வெண் மனஞ்சேரி, வாழக்கரை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 35 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் ஆபிரகாம் பேர்ள் மற்றும் சமுதாய முன்னேற்ற ஒருங்கிணைப்பாளர்களான ஜோதிமணி, செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த பயனாளிகளிடம் ஆடு வளர்ப்பு முறை மற்றும் பராமரிப்பு குறித்தும் பயிற்சியாளர்களான அமராவதி, ஜெயலட்சுமி, ரேவதி ஆகியோர் விளக்கிக் கூறினார்கள். உடன் நிகழ்வில் ஊராட்சி மன்ற துணை தலைவர் கருணாநிதி, மேலும் இவ்அமைப்பின் தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் இத்திட்டத்தில் பயன் பெற்ற பயனாளிகள் தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு பெரும் உதவியாக இருக்கும் என தங்களது மகிழ்ச்சியையும் தொண்டு நிறுவனத்திற்கு தங்களது நன்றியையும் தெரிவித்துள்ளனர்.