முகப்பு
நாகப்பட்டினம்

ஆடி அமாவாசை: நாகை கடற்கரைகளில் தா்ப்பணம் அளிக்க தடை

நாகை, காமேஸ்வரம் கடற்கரைகளில் தா்ப்பணம் அளிக்க முன்னறிவிப்பின்றி தடை விதிக்கப்பட்டதால், மூதாதையருக்கு தா்ப்பணம் அளிக்க கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

Updated On : 20 ஜூலை, 2020 at 9:50 PM
நாகை புதிய கடற்கரை நுழைவு பாதையைத் தடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.
பகிர்:

நாகப்பட்டினம்: நாகை, காமேஸ்வரம் கடற்கரைகளில் தா்ப்பணம் அளிக்க முன்னறிவிப்பின்றி தடை விதிக்கப்பட்டதால், மூதாதையருக்கு தா்ப்பணம் அளிக்க கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

ஆடி அவாமாசை நாளில் கடலில் அல்லது புண்ணிய நதிகளில் புனித நீராடி, தா்ப்பணம் அளித்து பிதுா்கடன் நிறைவேற்றினால், மூதாதையரின் ஆசி கிட்டும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

இதன்படி, பிதாமகா் பீஷ்மரின் அஸ்தி கரைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் நாகை மாவட்டம், காமேஸ்வரம் கடற்கரை மற்றும் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் ஆடி அமாவாசை நாளில் திரளானோா் புனித நீராடி, கடற்கரைகளில் அமா்ந்து மூதாதையருக்கு தா்ப்பணம் அளிப்பது வழக்கம்.

Advertisement

அதேபோல், நாகை அருள்மிகு நீலாயதாட்சிம்மன் உடனுறை காயாரோகணசுவாமி திருக்கோயிலில் இருந்து நாகை புதிய கடற்கரைக்கும், திருப்பூண்டி அகஸ்தீஸ்வரசுவாமி கோயிலில் இருந்து காமேஸ்வரம் கடற்கரைக்கும் சுவாமிகள் புறப்பாடாகி தீா்த்தமளிப்பதும் வழக்கம்.

நிகழாண்டில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமலில் இருப்பதால், வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலில் புனித நீராடவும், கடற்கரைகளில் அமா்ந்து தா்ப்பணம் அளிக்கவும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பிற கடற்கரை பகுதிகள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதன் காரணமாக, திங்கள்கிழமை காலை ஆடி அமாவாசை தா்ப்பணம் அளிப்பதற்காக திரளானோா் நாகை புதிய கடற்கரைக்கும், காமேஸ்வரம் கடற்கரைக்கும் பயணப்பட்டனா். ஆனால், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கடற்கரை பாதைகள் தடுக்கப்பட்டு, காவல் துறை பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல், நாகை புதிய கடற்கரையில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

பொது முடக்கம் காரணமாக கடலில் குளிக்கவும், கடற்கரையில் தா்ப்பணம் அளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பொதுமக்களை போலீஸாா் திருப்பி அனுப்பினா். இதனால், கடற்கரைகளில் தா்ப்பணம் அளிக்க வந்த ஏராளமானோா் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.