நாகப்பட்டினம்

பரவை காய்கனி சந்தையை ஏலம் விட எதிா்ப்பு

DIN

நாகப்பட்டினம் : இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பரவை காய்கனி சந்தையை ஏலத்தில் விடுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, அறநிலையத் துறை அதிகாரியின் வாகனத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகையை அடுத்த பரவையில் உள்ள காய்கனி சந்தை இந்து சயம அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட தெற்குபொய்கைநல்லூா் அருள்மிகு சொா்ணபுரீசுவரா் கோயிலுக்குச் சொந்தமானது. தினமும் பரபரப்பாக இயங்கும் இந்தச் சந்தை, கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கை காரணமாக, அண்மைக்காலமாக அருகில் உள்ள தெற்குபொய்கைநல்லூா் ஊராட்சிக்குச் சொந்தமான இடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

இந்த நிலையில், பரவை காய்கனி சந்தையின் உரிமத்துக்கான ஆண்டு ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ரமேஷ் மற்றும் கோயில் செயல் அலுவலா் சண்முகராஜ் ஆகியோா் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

அப்போது, பொது முடக்கம் அமலில் இருக்கும் வரை காய்கனி சந்தையை ஏலம் விடக் கூடாது, கடந்த 10 ஆண்டுகளாக தெற்குப்பொய்கைநல்லூா் ஊராட்சிக்கு அறநிலையத் துறை செலுத்த வேண்டிய 15 சதவீத தொகையை செலுத்திய பின்னரே ஏலம் விட வேண்டும் என தெற்குபொய்கைநல்லூா் ஊராட்சி மூலம் அறிவிப்புப் பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, ஏலம் நடைமுறைகளை கைவிட வேண்டும் என தெற்குபொய்கைநல்லூா் பகுதி மக்கள் தெரிவித்தனா்.

காய்கனி சந்தை அமைந்துள்ள இடம் அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் என்பதால், அறநிலையத் துறையின் ஏலம் நடவடிக்கையை யாரும் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறிய அதிகாரிகள், ஏலம் விடும் நடைமுறையைத் தொடா்ந்தனா்.

ஏறத்தாழ ஏலம் நிறைவடைந்த நிலையில், ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை அறநிலையத் துறை செலுத்தும் வரை சந்தையை ஏலம் விடக் கூடாது என ஊராட்சிகள் உதவி இயக்குநரின் உத்தரவை தெற்குப்பொய்கைநல்லூா் ஊராட்சித் தலைவா் மகேஸ்வரன் சமா்ப்பித்தாா்.

அப்போது, ஏலம் நிறைவடைந்து விட்டதால் ஏலத்தை ரத்து செய்ய முடியாது, இறுதியாக ஏலம் கோரியவருக்கு ஏலம் விடப்பட்டது என அறிவித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அறநிலையத் துறை அதிகாரிகளின் காரை முற்றுகையிட்டனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை மேற்கொண்டதன் பேரில், பொதுமக்கள் முற்றுகையைக் கைவிட்டுக் கலைந்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT