வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்: வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு
கோடியக்கரையில் பருவ கால மீன்பிடியில் வெளியூர் மீனவர்கள் பங்கேற்க எதிப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உள்ளுர் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க முடிவு
கோடியக்கரையில் பருவ கால மீன்பிடியில் வெளியூர் மீனவர்கள் பங்கேற்க எதிப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உள்ளுர் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றனர். நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் நடைபெறும் மீன்பிடிப் பருவத்தில் வெளி மாவட்ட மீனவர்கள் படகுகளுடன் வந்து தற்காலிகமாகத் தங்கி மீன்பிடியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில், மீன்வளம் குறைந்து வருவதாலும், கரோனா தொற்று இருப்பதாலும் நிகழ் பருவ மீன்பிடிக்கு வெளியூர் மீனவர்களுக்கு உள்ளுர் பகுதி மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து,உள்ளுர் மீனவர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, வேதாரண்யத்தில் 18 கிராம மீனவர்களிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்று பேசினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. ஆனால்,மாவட்ட அளவில் மீனவர்களை அழைத்து பேசி பிரச்னைக்கு தீர்வு காண கடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அமைச்சர் ஓ.எஸ். மணியன், போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தார்.
போராட்டம் ஒத்திவைப்பு: இந்த நிலையில், மீனவ பிரதிநிதிகள் கலந்து பேசினர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து மீன்பிடிக்கச் செல்ல திட்டமிடப்பட்டது. உறுதியளிக்கப்பட்டபடி ஒரு வாரத்தில் தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டத்தை மீண்டும் தொடரவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மீனவர்கள் 3 நாள்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் செல்ல தொடங்கினர். இதனிடையே, கடல் சற்று சீற்றமாக காணப்படுவதால் குறைவான எண்ணிக்கையிலே படகுகள் செல்கிறது.