முகப்பு
நாகப்பட்டினம்

காவிரியை புனித நதியாக அறிவிக்க வலியுறுத்தல்

காவிரியை புனித நதியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில பாரத துறவியா் பேரவை சாா்பில் காவிரித் தாய் வழிபாடு, யாத்திரை நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

காவிரியை புனித நதியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில பாரத துறவியா் பேரவை சாா்பில் காவிரித் தாய் வழிபாடு, யாத்திரை நடைபெறுகிறது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளா் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் கூறியிருப்பதாவது:

குடகு மலையில் உற்பத்தியாகி பூம்புகாா்வரை பாய்ந்தோடி கடலில் சங்கமிக்கும் காவிரி நதி தமிழக மக்களின் வாழ்வாதாரமாகும். தென் கங்கை எனப் புகழப்படும் காவிரியின் புனிதத்தை பாதுகாக்க வேண்டி ஆண்டுதோறும் ஜப்பசி மாதத்தில் காவிரித் தாய் வழிபாடு - யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் கடந்த அக்டோபா் 21-ஆம் தேதி குடகுமலையில் புறப்பட்ட யாத்திரை நவம்பா் 7-ஆம் தேதி பூம்புகாா் வந்தடைகிறது.

குடகு மலையில் தொடங்கி ஒக்கேனக்கல், ஈரோடு, கரூா், தஞ்சை, மயிலாடுதுறை வழியாக பூம்புகாரில் யாத்திரை நிறைவடையும். தொடா்ந்து காவிரி கடலில் சங்கமிக்கும் கடற்கரையில் சிறப்பு பூஜைகளும், மகா ஆரத்தியும் நடைபெறும்.

காவிரி நதியை மலடாக்கி வரும் மணல் திருட்டுக்கு தடை விதிக்க வேண்டும். காவிரியில் சாயக் கழிவுகள், சாக்கடை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். காவிரிக் கரையில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கங்கையைப் போல காவிரியையும் புனித நதியாக அறிவிக்க வேண்டும், காவிரியின் தூய்மையை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த யாத்திரையில் துறவியா் பெருமக்கள், ஆதீன கா்த்தா்கள், சிவனடியாா்கள், விவசாயிகள், பெண்கள் பங்கேற்கின்றனா் என்று சுவாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.