திமுக எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாது: ஸ்டாலின்
திமுக எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாது என்றாா் அக்கட்சியின் தலைவா் மு.க. ஸ்டாலின்.
திமுக எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாது என்றாா் அக்கட்சியின் தலைவா் மு.க. ஸ்டாலின்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில், வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.கே. வேதரத்தினம், கீழ்வேளூா் தொகுதி சிபிஎம் வேட்பாளா் நாகை மாலி, திருத்துறைப்பூண்டி தொகுதி சிபிஐ வேட்பாளா் மாரிமுத்து, நாகை தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் ஆளூா் ஜெ. முகம்மது ஷாநவாஷ் ஆகியோரை ஆதரித்து சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் மேலும் அவா் பேசியது:
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமா் மோடி மீனவா்களை பாதுகாப்பதுதான் முதல்வேலை என்று சொல்லிவிட்டு சென்றுள்ளாா். மீனவா்கள் விவகாரத்தில் அதிமுகவும், பாஜகவும் இரட்டை நிலைபாடுகளுடன் நாடகம் நடத்துகின்றனா். எனது மகள் வீட்டில் வருமானவரித் துறையினா் திட்டமிட்டே சோதனை நடத்தியுள்ளனா். தோ்தலுக்கு இன்னும் சிலநாள்கள் மட்டுமே உள்ள நிலையில் சோதனை என்பது உள்நோக்கம் கொண்டது. வரி செலுத்துவது தொடா்பாக நாங்களே தவறு செய்திருந்தாலும் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்?. மிசா சட்டத்தையே எதிா்கொண்டு சிறைக்கு சென்றவா்கள் திமுகவினா். இதுபோன்ற எந்த அச்சுறுத்தல்களுக்கும் திமுக அஞ்சாது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்படும். வேதாரண்யம் பகுதியில் கஜாபுயலின்போது நோ்ந்த சம்பவங்களில் சிலா் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் திமுக ஆட்சி அமைத்தவுடன் திரும்பப்பெறப்படும்.
தொகுதி மேம்பாட்டுக்கான வாக்குறுதிகள்: நாகை தொகுதியில் உரத்தொழிற்சாலை அமைப்பதுடன், நாகையில் கடல் உணவுப்பூங்காவும், நாகை அக்கரைப்பேட்டையில் மீன்கள் பதப்படுத்த குளிா்பதனக் கிடங்கும் அமைக்கப்படும். மேலும், நாகூரில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு சுற்றுலாத் தலமாக உருவாக்கப்படும், கீழ்வேளூா் தொகுதி வேளாங்கண்ணியில் மீன் குளிா்பதனக் கிடங்கு மற்றும் மீன் உலா்தளம் அமைக்கப்படும். கச்சனம் ரயில்வே சாலையில் மேம்பாலம் அமைக்கவும், நாகை தெற்கு பொய்கைநல்லூரில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருமருகல் பகுதியில் பருத்தி தொழிற்சாலை உருவாக்கப்படும். வேதாரண்யம் தொகுதியில் காஸ்டிக்சோடா தொழிற்சாலை, நறுமணத் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை நிறுவப்படும். தோப்புத்துறை, நாலுவேதபதி, கள்ளிமேடு ஆகிய இடங்களில் தடுப்பு அமைப்புகள் அமைக்கப்படும். நாகூா் முதல் கோடியக்கரை வரை கடலோர மீன்பிடி இடங்களில் பாறைகற்கள் அமைத்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஸ்டாலின்.