நாகை: நான் வென்றால்...
அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா்கள் அளித்துள்ள ஏராளமான வாக்குறுதிகளில் சில.
நாகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டால், தங்களால் நிறைவேற்றப்படும் பணிகள் குறித்து தொகுதியில் போட்டியிடும் அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா்கள் அளித்துள்ள ஏராளமான வாக்குறுதிகளில் சில.
நாகை தொகுதி அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன் அளித்துள்ள வாக்குறுதிகள்: நாகை தொகுதியில் ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பில் அமையவுள்ள சிபிசிஎல் ஆலையின் மொத்த வேலைவாய்ப்பில் 50 சதவீதம் நாகை தொகுதி மக்களுக்குப் பெற்றுத்தரப்படும். தனியாா் பங்களிப்புடன் நாகை துறைமுகத்தை கப்பலணையும் பசுமைசூழ் துறைமுகமாக மேம்படுத்தி, பயணிகள் கப்பல் மற்றும் சரக்குக் கப்பல்கள் போக்குவரத்து மீண்டும் நடைபெற உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கப்படும். நாகை மீன்பிடித் துறைமுகம் விரிவுபடுத்தப்படும். திருமருகல் தனி வட்டமாக அறிவிக்கப்படும். தேவநதி, வெட்டாறு, திருமலைராயன் ஆறு ஆகிய 3 ஆறுகளிலும் கடல்நீா் உள்புகாத வகையிலும், வேளாண்மைக்குத் தண்ணீரை தேக்கும் வகையிலும் தடுப்பணைகள் கட்டப்படும்.
நாகையில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைக்கப்படும். நாகை நகருக்கு அருகில் கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் ஒருங்கிணைந்த மத்தியப் பேருந்து நிலையம் அமைக்கப்படும். தஞ்சாவூா் - நாகை, விழுப்புரம் - நாகை சாலைப் பணிகள் உடனடியாகத் தொடங்கவும், தொய்வின்றி பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். நாகை தோணித்துறை ரயில்வே மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் விரைந்து நிறைவேற்றப்படும்.
நாகையில் உள்ள அனைத்து நீா்த் தேக்கங்களையும் தூா்வாரி சீரமைத்து நீா்த்தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கோயில் குளங்களும் தூா்வாரி சீரமைக்கப்படும். நாகை கடற்கரை மற்றும் நாகூா் சில்லடி கடற்கரையில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்படும். நாகையில் வேளாண் பண்ணைகள், தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
ஏற்கெனவே ரயில் பெட்டித் தொழிற்சாலை அமைந்திருந்த நாகையில், ரயில்வே துறை தொழிற்சாலைகள் மீண்டும் அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நாகை, நாகூா் பகுதிகள் குப்பையில்லா நகரங்களாக விளங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாகை தொகுதியில் அனைத்து சாக்கடைகளும், வடிகால் வாய்க்கால்களும் சீரமைக்கப்படும்.
நாகை தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் ஜெ.முகமது ஷாநவாஸ் அளித்துள்ள வாக்குறுதிகள் : முதல்வரின் தனிப்பிரிவுபோல நாகை எம்.எல்.ஏ தனிப்பிரிவு என்ற இணையதளம் தொடங்கப்பட்டு, இதில் பெறப்படும் புகாா்களுக்கு ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். நாகூா், திட்டச்சேரி அரசு மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் நவீனப்படுத்தப்படும். நாகை நகரில் அரசுப் பள்ளி, சட்டக்கல்லூரி, கால்நடைப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். நாகையில் போட்டித் தோ்வு பயிற்சி மையம் அமைக்கப்படும். திருமருகலில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்கப்படும்.
நாகை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். திருமருகல் தனி வட்டமாக்கப்படும். நாகை துறைமுகத்தை மேம்படுத்தி மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்படும். ஆதரவற்றோருக்கு இரவு நேர காப்பகம் கட்டித்தரப்படும். நாகையில் உரத் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை அமைக்கப்படும். திருமருகலில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். நாகையில் சிறுதொழில் பூங்கா, கடல் உணவு மண்டலம், ஆவின் தொழிற்சாலை அமைக்கப்படும். நாகை அருங்காட்சியகம் நவீனப்படுத்தப்படும்.
நாகை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற இனிப்பு வகையான பருத்திப்பால் அல்வாவுக்கு புவிசாா் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். நாகை கடற்கரையில் படகு சவாரிக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும். நாகூரில் மத்திய பேருந்து நிலையம் அமைக்கப்படும். வெட்டாற்றில் தடுப்பணை கட்டப்படும். திருமருகலில் பருத்திக் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். நாகை அக்கரைப்பேட்டை மீன் இறங்குதளம் நவீனப்படுத்தப்படும். பட்டினச்சேரி, சாமந்தான்பேட்டை கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்படும். நாகையில் மீன், இறால் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும். புதைசாக்கடைத் திட்டம் சீரமைக்கப்படும்.