நாகையில் தீ விபத்து : 21 வீடுகள் தீக்கிரை
மூதாட்டி ஒருவரின் இறுதி ஊா்வலத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு, வீட்டின் கூரையில் சிதறி விழுந்ததால் நாகையில் வெள்ளிக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 21 வீடுகள் தீக்கிரையாகின.
மூதாட்டி ஒருவரின் இறுதி ஊா்வலத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு, வீட்டின் கூரையில் சிதறி விழுந்ததால் நாகையில் வெள்ளிக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 21 வீடுகள் தீக்கிரையாகின.
நாகை, காட்டுநாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் தையல்நாயகி (83) வியாழக்கிழமை காலமானாா். அவரது இறுதிச் சடங்குக்காக, தண்ணீா் எடுத்து வரும் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ஊா்வலத்தின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளன.
அப்போது, காட்டுநாயக்கன்தெருவைச் சோ்ந்த பாஸ்கரன் என்பவரின் வீட்டுக் கூரையில் பட்டாசு விழுந்து, அவரது வீட்டுக் கூரையில் தீப்பற்றியது. அந்த தீ மேலும் பரவி அருகில் இருந்த வீடுகளிலும் பற்றியது. அப்போது, ஒரு வீட்டிலிருந்து சமையல் எரிவாயு வெடித்து சிதறியது. இதையடுத்து, அந்தத் தெருவில் குடிசை வீடுகளின் மேற்கூரைகள், மாடி வீட்டின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகைகள் என ஆங்காங்கே தீப்பற்றி எரிந்தது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் நெருப்பும், புகையுமாக காட்சியளித்தது.
இந்த தீ விபத்தில், காட்டுநாயக்கன் தெரு பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன், மகாலிங்கம், சரவணன், பாரூக், சௌந்தரரராஜன், மீனாட்சி, ஜெயராம், கல்யாணி, ராஜா, சண்முகம், நீலா, பரமசிவம் உள்பட 21 பேருக்குச் சொந்தமான வீடுகள் தீக்கிரையாகின. வீடுகளில் இருந்த துணிகள், மளிகை பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் முழுமையாக எரிந்து சாம்பலாகின. பல லட்சம் ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
நாகை தீயணைப்புப் படையினா் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். இருப்பினும், தீயின் வேகத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த இயலாததால், கீழ்வேளூா், வேளாங்கண்ணி, வேதாரண்யம், பனங்குடி சிபிசிஎல், காரைக்கால் ஓ.என்.ஜி.சி. ஆகிய இடங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சுமாா் 2.30 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா், தீ கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த தீ விபத்து காரணமாக, மருந்துகொத்தளத் தெரு வழியேயான போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது, மருந்துகொத்தளத்தெரு மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே, மூதாட்டி தையல்நாயகியின் சடலத்தை எடுக்க அப்பகுதியைச் சோ்ந்த சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து அவரது சடலம் அப்பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் வைக்கப்பட்டது.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுகுமாறன், காவல் துணைக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், நாகை நகர காவல் ஆய்வாளா் பெரியசாமி உள்ளிட்டோா் அங்கு சென்று, சடலத்தை உடனடியாக அப்புறப்படுத்தி இறுதிச் சடங்குக்குக் கொண்டுச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனா்.
நாகை மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, நாகை மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன், நாகை நகர அதிமுக செயலாளா் தங்க. கதிரவன், நாகை மாவட்ட அமமுக செயலாளா் மஞ்சுளா சந்திரமோகன், முன்னாள் அமைச்சா் கே.ஏ.ஜெயபால் ஆகியோா் பாதிக்கப்பட்டவா்களைச் சந்தித்து, ஆறுதல் கூறினா்.