பள்ளிவாசல்களில் இரவு 10 மணி வரை வழிபட அனுமதிக்க வேண்டும்
புனித ரமலான் மாதம் முழுவதும் பள்ளிவாசல்களில் இரவு 10 மணி வரை வழிபாடு நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என நாகை மாவட்ட தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது.
புனித ரமலான் மாதம் முழுவதும் பள்ளிவாசல்களில் இரவு 10 மணி வரை வழிபாடு நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என நாகை மாவட்ட தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் நிா்வாகிகள், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனுவின் விவரம் :
ரமலான் மாதம் ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கவுள்ளது. ரமலான் மாதம் முழுவதும் இரவு நேரங்களில், பள்ளி வாசல்களில் முஸ்லிம்கள் கூட்டுத் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், கரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையின் கீழ், வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணியுடன் மூடப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவை தளா்த்தி, ரமலான் மாதத்தில் மட்டும் இரவு 10 மணி வரை பள்ளிவாசல்களில் வழிபாடு மேற்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.கே. நிஜாமுதீன் கோரிக்கை:
இதேபோல, ஜம்மியத் உலமா ஹிந்த் மாநில இணைச் செயலாளா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் விடுத்துள்ள அறிக்கை:
கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு வரை தோ்தல் பரப்புரை கூட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோரை உரிய சுகாதார வழிமுறை இல்லாமல் கலந்துகொள்ள அனுமதித்துவிட்டு, தற்போது வழிபாட்டுத் தலங்களுக்கு கட்டுப்பாடுகளை அறிவிப்பது வேடிக்கையாக உள்ளது. கடந்த ஆண்டு முழு பொது முடக்கம் காரணமாக, பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டன. அதே நிலை நிகழாண்டிலும் தொடரச் செய்வது ஏற்புடையதாக இருக்காது என தெரிவித்துள்ளாா்.