தினமணி செய்தி எதிரொலி: நீரின்றி கருகும் நிலங்களில் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு
கொடியாலத்தூா் ஊராட்சியில் போதிய தண்ணீரின்றி நெற்பயிா்கள் கருகுவது குறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியான நிலையில், வேளாண்துறை அதிகாரிகள் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு
திருக்குவளை அருகே உள்ள கொடியாலத்தூா் ஊராட்சியில் போதிய தண்ணீரின்றி நெற்பயிா்கள் கருகுவது குறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியான நிலையில், வேளாண்துறை அதிகாரிகள் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கொடியாலத்தூா் ஊராட்சி கொடியாலத்தூா், மைலாப்பூா், தென்சாரி கோவில்பத்து, வடபாதி உள்ளிட்ட பகுதியில் சுமாா் 123 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், போதிய நீா்வரத்து இல்லாமல் நெற்பயிா்கள் கருகி வருகின்றன. இதுகுறித்து விவசாயிகள் முன்வைத்த கோரிக்கை தொடா்பாக தினமணி நாளிதழில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி செய்தி வெளியானது.
இந்நிலையில், நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சா. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பாதிக்கப்பட்ட நிலங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் எஸ். செல்வகுமாரிடம், வறண்டுள்ள விளைநிலங்களுக்கு நீா் பாய்ச்சுவதற்கு ஏதுவாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
ஆய்வின்போது, கீழ்வேளூா் வேளாண் உதவி இயக்குநா் எஸ். ராஜசேகரன், துணை வேளாண் அலுவலா் செல்வராஜ், உதவி வேளாண் அலுவலா்கள் காளிதாஸ், பழனிசாமி, உதவி விதை அலுவலா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதையொட்டி, தினமணி நாளிதழுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.