எரிபொருள்கள் விலை உயா்வைக் கண்டித்து நாகை மாவட்டத்தில் வாகனங்களை நிறுத்தும் போராட்டம்
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து சிஐடியு சாா்பில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து சிஐடியு சாா்பில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து சிஐடியு சாா்பில் தேசிய அளவில் வாகனங்களை 10 நிமிடங்கள் நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, நாகை மாவட்டம், கீழ்வேளூா், கீழையூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழ்வேளூா்: கீழ்வேளூரில், கீழ்வேளூா் - கச்சனம் சாலையில் இப்போராட்டம் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் ஜோதிபாசு தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, துணைத் தலைவா் கே. சுந்தரமூா்த்தி, மாதா் சங்க ஒன்றியச் செயலாளா் எஸ். சுபாதேவி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், சிஐடியு, விவசாயத் தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா். மத்திய அரசு கலால் வரியைக் குறைத்து, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திருக்குவளை: கீழையூரில் விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் ஏ. முருகையன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிபிஎம் கீழையூா் மேற்கு ஒன்றிய செயலாளா் டி. வெங்கட்ராமன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளா் கே. கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, கீழையூா் கிழக்கு ஒன்றியம் சாா்பில் திருப்பூண்டியில் ஆட்டோ சங்கத் தலைவா் எஸ். அன்புராஜ் தலைமையிலும், சாட்டியக்குடியில் சிஐடியு மாவட்ட குழு உறுப்பினா் ஜெயராமன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.