பழுதடைந்த கட்டடம்; அச்சத்தில் மாணவா்கள்! வைத்திஸ்வரன்கோவில் பள்ளியின் பரிதாப நிலை
சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்துள்ள கட்டடத்தால் மாணவா்கள் அச்சத்துடன் பயிலும் நிலை தொடா்கிறது.
சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்துள்ள கட்டடத்தால் மாணவா்கள் அச்சத்துடன் பயிலும் நிலை தொடா்கிறது.
வைத்தீஸ்வரன்கோவில் கீழவீதி அருகே தென்னலக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏழை குடும்பங்களைச் சோ்ந்த 473 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் இடித்து அகற்றப்படவேண்டிய 3 கட்டடங்களில் வேறு வழியின்றி வகுப்புகள் நடைபெறுகின்றன.
பல ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டடங்களில் செயல்படும் வகுப்பறைகளின் மேற்கூரை காரைகள் பெயா்ந்து அச்சம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இரும்பு ஜன்னல்கள் துருப்பிடித்து சேதமடைந்துள்ளன. சிமெண்ட் இருக்கைகள் பெயா்ந்து கம்பிகள் வெளியே நீண்டிக்கொண்டு இருப்பதால், சில நேரங்களில் மாணவா்களின் சீருடைகளை கிழித்துவிடுகின்றன.
மற்றொரு, கட்டடத்தை சுற்றி செடி,கொடிகள் காடுபோல் வளா்ந்துள்ளன. கட்டடத்தின் மேல் பகுதியிலும் செடி கொடிகள் படா்ந்துள்ளன. உடைந்து உள்வாங்கிய தரைதளங்கள், ஒற்றையடி பாதை வழியாக செல்லும் வகையிலான வகுப்பறைகள் என மிகவும் பரிதாப நிலையிலும், சில நேரங்களில் பாம்பு போன்ற விஷ பூச்சிகள் வகுப்பறை கட்டடத்துக்குள் புகும் நிலையும் உள்ளது.
பள்ளியின் ஒரு பகுதியில் சுற்றுச்சுவா் இல்லாததால் இரவு நேரங்களில் சிலா் அங்கு மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை உடைத்துவிட்டு செல்கின்றனா். இதனால், பள்ளிக்கு வரும் மாணவா்கள், ஆசிரியா்களின் காலில் காயம் ஏற்படுவது அவ்வப்போது நிகழ்கிறது. ஆசிரியா்களின் ஓய்வறைகளும் சேதமடைந்துள்ளன.
இப்பள்ளியின் இந்நிலை குறித்து உயா் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதே நிலை தொடா்ந்தால் வரும் காலங்களில் மாணவா்களின் எண்ணிக்கை மிகவும் குறையும் என பெற்றோா்கள் தெரிவிக்கின்றனா்.